லண்டன் விமான நிலையத்தில் ரஜினிகாந்த் மகள்-மருமகன் தவிப்பு; பாஸ்போர்ட் திருட்டு போனதால் பரபரப்பு


லண்டன் விமான நிலையத்தில் ரஜினிகாந்த் மகள்-மருமகன் தவிப்பு; பாஸ்போர்ட் திருட்டு போனதால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Sep 2019 10:45 PM GMT (Updated: 5 Sep 2019 7:49 PM GMT)

பாஸ்போர்ட் திருட்டு போனதால் லண்டன் விமானநிலையத்தில் ரஜினிகாந்தின் மகள்-மருமகன் இருவரும் தவித்தார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் இந்திய தூதரக அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களுக்கு தற்காலிக பாஸ்போர்ட் கொடுத்தனர். இதனால் அவர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியே வரமுடிந்தது.

லண்டன், 

நடிகர் ரஜினிகாந்தின் 2-வது மகள் சவுந்தர்யா. இவருக்கும், கோவையை சேர்ந்த தொழிலதிபர் விசாகனுக்கும் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் திருமணம் நடந்தது. விசாகனுக்கு வெளிநாடுகளில் தொழில்கள் உள்ளன. அவற்றை கவனிக்க, அவர் அடிக்கடி வெளிநாடு செல்வது வழக்கம்.

சவுந்தர்யா சினிமா டைரக்டராகவும், ‘கிராபிக்ஸ்’ தொழில்நுட்ப கலைஞராகவும், இருந்து வருகிறார். 3 நாட்களுக்கு முன்பு சவுந்தர்யாவும், விசாகனும் லண்டன் நகரத்திற்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதற்காக சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் லண்டன் செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்கள்.

சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் லண்டன் ஹீப்ரு விமான நிலையத்தை அடைந்தது. விமானத்தில் இருந்து விசாகனும், சவுந்தர்யாவும் இறங்கி, விமான நிலையத்துக்குள் வந்தார்கள்.

விசாகன் தனது பாஸ்போர்ட்டை எடுப்பதற்காக சூட்கேசை தேடினார். அப்போது அது திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதனால் கணவன்-மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதன்காரணமாக அவர்கள் விமானநிலையத்தில் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் அவர்கள் இருவரும் விமான நிலையத்தில் தவித்தனர். பின்னர் விமான நிலைய அதிகாரியிடம் அவர்கள் பாஸ்போர்ட் திருட்டு குறித்து புகார் செய்தனர்.

அதிகாரிகள் புகாரை பதிவு செய்து கொண்டு விமான நிலையத்தில் உள்ள ஓய்வு அறையில் இருவரையும் தங்கவைத்தார்கள். இதுபற்றி தகவல் இந்திய தூதரகத்துக்கு தெரியவந்தது. தூதரக அதிகாரிகள் உடனடியாக விமான நிலையத்துக்கு வந்து விசாகன்-சவுந்தர்யாவிடம் விசாரித்தார்கள்.

பின்னர் அவர்களுக்கு இந்திய தூதரக அதிகாரிகள் டூப்ளிக்கேட் பாஸ்போர்ட் அளித்தனர். பின்னர் அது விமான நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பின், சவுந்தர்யாவும், விசாகனும் வெளியே வந்தார்கள்.

இதுபற்றிய தகவல் ரஜினிகாந்துக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக லண்டனில் உள்ள தனது நண்பர்களை தொடர்பு கொண்டு மகளுக்கும், மருமகனுக்கும் உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

விசாகன் அளித்த புகாரின் அடிப்படையில் அவருடைய சூட்கேசை திருடியவர் யார்? என்று லண்டன் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story