விக்ரம் லேண்டர் தரை இறங்காமல் போனது பற்றி வெளிநாட்டு ஊடகங்கள் சொன்னது என்ன?


விக்ரம் லேண்டர் தரை இறங்காமல் போனது பற்றி வெளிநாட்டு ஊடகங்கள் சொன்னது என்ன?
x
தினத்தந்தி 8 Sep 2019 12:15 AM GMT (Updated: 7 Sep 2019 11:06 PM GMT)

விக்ரம் லேண்டர் தரை இறங்காமல் போனது பற்றி பல்வேறு வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன. அது பற்றிய ஒரு பார்வை இது:-

வா‌ஷிங்டன், 

அமெரிக்க நாளேடு, நியூயார்க் டைம்ஸ்

இந்தியா தனது முதல் முயற்சியில் நிலவில் தரை இறங்காமல் போய் இருக்கலாம். ஆனால் அதன் பொறியியல் வலிமையும், விண்வெளித்துறை வளர்ச்சியும் பல்லாண்டு காலமாக உலகளாவிய அபிலாசைகளுடன் இணைந்துள்ளது என்பதையே காட்டுகின்றன.

சந்திரயான்-2 திட்டத்தின் ஒரு பகுதி தோல்வி அடைந்திருக்கிறது. அதன் ஆர்பிட்டர் செயல்பாட்டில் உள்ளது. ஆனால் நிலவின் மேற்பரப்பில் ஒரு துண்டுப்பகுதியில் தரை இறங்கிய நாடுகளின் வரிசையில் இந்தியா சேர்வது தாமதம் ஆகி இருக்கிறது.

இங்கிலாந்து நாளிதழ் தி கார்டியன்

நிலவில் தரை இறங்கும் இந்தியாவின் முயற்சி, கடைசி நிமிடத்தில் தகவல் தொடர்பு இழப்பால் பாதித்துள்ளது.

20 ஆண்டுகளில், 50 ஆண்டுகளில், 100 ஆண்டுகளில் எதிர்காலத்தில் மனிதர்கள் குடியேறக்கூடிய இடங்களுக்கு இந்தியா சென்று கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் வா‌ஷிங்டன் போஸ்ட்

நிலவில் தரை இறங்கும் முதல் முயற்சியில் இந்தியா தோல்வியைத் தழுவியதாகத் தோன்றுகிறது. ஆனால் இந்தப் பணி மகோன்னத தேசிய பெருமைக்கு ஒரு ஆதாரமாக அமைந்து விட்டது.

பின்னடைவுக்கு மத்தியிலும், சமூக ஊடகங்கள் இஸ்ரோவுக்கும், விஞ்ஞானிகளுக்கும் ஆதரவு காட்டின. இந்தியாவின் விண்வெளி அபிலாசைகளுக்கு இந்த திட்டம் ஒரு பின்னடைவாக இருக்கலாம்.

இந்திய விண்வெளி திட்டத்தின் வெற்றிகளில் ஒன்று, அதன் குறைவான செலவு ஆகும். சந்திரயான்-2 திட்டத்துக்கான செலவு 141 மில்லியன் டாலர்தான் (சுமார் ரூ.987 கோடி). அமெரிக்கா தனது வரலாற்று நிகழ்வாக நிலவுக்கு அப்பல்லோவை அனுப்பியதில் செலவான தொகையில் ஒரு சிறிய பகுதிதான் இந்தத் தொகை.

அமெரிக்காவின் சி.என்.என்.டெலிவி‌‌ஷன்

நிலவில் மெதுவாக தரை இறங்கும் இந்தியாவின் வரலாற்று முயற்சி தோல்வியில் முடிந்திருக்கலாம். ஆனால் லேண்டர் தரை இறங்குவதற்கு ஒவ்வொரு அடி கீழிறங்கியபோதும் மக்கள் கூட்டம் அதை கொண்டாடியது.

லேண்டர் தரை இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தருணத்தில் பெரும் அமைதி சூழ்ந்தது.

பிரான்சின் டி மாண்டி நாளேடு

சந்திரயான்-2 லேண்டர் தரை இறங்காமல் போனது சிதைந்து போன கனவு. நிலவில் தரை இறங்குவதில் வெற்றி சதவீதம் 45 சதவீதமாக உள்ளதாக விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

இவ்வாறு வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவித்தன.

Next Story