தலீபான்களுடனான சமரச பேச்சுவார்த்தை ரத்து - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடி


தலீபான்களுடனான சமரச பேச்சுவார்த்தை ரத்து - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடி
x
தினத்தந்தி 8 Sep 2019 11:15 PM GMT (Updated: 8 Sep 2019 11:03 PM GMT)

ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தலீபான்களுடனான சமரச பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு, அல்-கொய்தா பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.

இதில் அங்கு ஆட்சியில் இருந்த தலீபான்கள் விரட்டியடிக்கப்பட்டு, ஜனநாயக ஆட்சி கொண்டுவரப்பட்டது. எனினும் தலீபான்களை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. ஆப்கானிஸ்தானில் 40 சதவீத பகுதிகள் இன்னமும் தலீபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

அவர்கள் அதிபர் அஷ்ரப் கனி அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். 19 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த உள்நாட்டு போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா பக்கபலமாக இருந்து வருகிறது.

சுமார் 14,000 அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் நேரடியாக போரில் ஈடுபடாமல் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சியும், ஆலோசனையும் அளித்து வருகின்றனர்.

உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் அஷ்ரப் கனி அரசியல் ரீதியாக முயற்சி செய்து வருகிறார். தலீபான் அமைப்பை அரசியல் கட்சியாக அங்கீகரிக்க தயார் என அறிவித்தார். இந்த முயற்சிக்கு அமெரிக்காவும் ஆதரவு அளித்தது.

மேலும் தலீபான் பயங்கரவாத அமைப்புடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தவும் அமெரிக்கா முன்வந்தது. தலீபான்களும் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டனர்.

அதன்படி கத்தார் தலைநகர் தோஹாவில் தலீபான் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க அரசு அதிகாரிகள் இடையே 9 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெறுவது தான் இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக இருந்தது.

பேச்சுவார்த்தையின் இறுதியில், அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவதற்கு ஈடாக, அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் தாக்க முற்படும் பயங்கரவாத குழுக்களுக்கான தளமாக ஆப்கானிஸ்தான் மீண்டும் பயன்படுத்தப்படாது என தலீபான் அமைப்பு உறுதி அளித்தது.

அதன் பேரில் 20 வாரங்களுக்குள் 5,400 படை வீரர்களை திரும்பப்பெற்றுக்கொள்ள அமெரிக்கா ஒப்புக்கொண்டது. இது குறித்து பேசி இறுதி முடிவை எட்டுவதற்காக அமெரிக்காவில் தலீபான் தலைவர்களும், ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் கடைசி நேரத்தில் தலீபான் தலைவர்களுடனான சந்திப்பை டிரம்ப், ரத்து செய்தார். மேலும் தலீபான்களுடனான சமரச பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் “துரதிர்ஷ்டவசமாக, தவறான செல்வாக்கை உருவாக்குவதற்காக, காபூலில் நடந்த ஒரு தாக்குதலுக்கு தலீபான்கள் பொறுப்பு ஏற்று உள்ளனர். அந்த தாக்குதலில் அமெரிக்க வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார். எனவே உடனடியாக தலீபான் தலைவர்களுடனான சந்திப்பை ரத்து செய்து, சமரச பேச்சுவார்த்தைகளை நிறுத்தினேன்” என தெரிவித்தார்.

மேலும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி உடனான சந்திப்பையும் தான் ரத்து செய்ததாக டிரம்ப் கூறினார். ஆனால் டிரம்பை, அஷ்ரப் கனி தனியாக சந்தித்து பேசியதாக ஆப்கானிஸ்தான் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் தலீபான்கள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த முடியும் எனவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் டிரம்பின் இந்த அதிரடி முடிவு குறித்து, தலைவர்கள் அவசர கூட்டம் நடத்தி ஆலோசித்து வருவதாக தலீபான் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.


Next Story