முதலீட்டாளர்கள் மாநாட்டில் கவர்ச்சி நடனம் - பாகிஸ்தானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்


முதலீட்டாளர்கள் மாநாட்டில் கவர்ச்சி நடனம் - பாகிஸ்தானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
x
தினத்தந்தி 9 Sep 2019 6:14 AM GMT (Updated: 9 Sep 2019 11:45 PM GMT)

பாகிஸ்தானில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆபாச நடனம் ஆடப்பட்ட விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் பாகிஸ்தானின் கடன் சுமை ரூ.6 லட்சம் கோடியில் இருந்து ரூ.30 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதே சமயம் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு கூட அந்நாட்டில் வரி வசூல் ஆவதில்லை. எனவே பாகிஸ்தானை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க பிரதமர் இம்ரான்கான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் சார்பில் அஜர்பைஜான் நாட்டின் தலைநகரான பகுவில் கடந்த 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்துகொண்டனர். முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், பொருளாதாரத்தை உயர்த்துவதற்காகவும் நடந்த இந்த மாநாட்டில் விருந்தினர்களை கவர அழகிகளின் கவர்ச்சி நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பெண் பத்திரிகையாளர் ஒருவர், கவர்ச்சி நடனம் தொடர்பான வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டார். உடனடியாக இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, பலரும் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். “அழகிகளின் கவர்ச்சி நடனம் நடத்தி தான் முதலீடுகளை ஈர்க்க வேண்டிய நிலையில் பாகிஸ்தான் உள்ளது” என்று ஒருவர் குறிப்பிட்டார்.

மற்றொரு நபர் இந்தியா விண்ணில் ஏவிய ‘சந்திரயான்-2’ குறித்து பாகிஸ்தான் மந்திரி கேலி செய்ததை குறிப்பிட்டு “சந்திரயான்-2 வை கேலி செய்தவர்கள் இதை நன்றாக பார்க்கட்டும். முதலீடுகளை ஈர்ப்பதற்காக இது போன்ற ஆபாச நடனங்களை தவிர பாகிஸ்தானிடம் காட்டுவதற்கு வேறு ஒன்றும் இல்லை” என கருத்து பதிவிட்டுள்ளார்.

Next Story