இந்தியா -பாகிஸ்தான் இடையேயான பதற்றம் தணிந்துள்ளது: அமெரிக்க அதிபர் டிரம்ப்


இந்தியா -பாகிஸ்தான் இடையேயான பதற்றம் தணிந்துள்ளது: அமெரிக்க அதிபர் டிரம்ப்
x
தினத்தந்தி 10 Sep 2019 2:12 AM GMT (Updated: 10 Sep 2019 2:12 AM GMT)

இந்தியா -பாகிஸ்தான் இடையேயான பதற்றம் தணிந்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இருந்ததை போல் இல்லாமல், தற்போது பதற்றம்  தணிந்து இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டிரம்ப் கூறியதாவது:-

 இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் விவகாரத்தால் முறுக்கிக் கொண்டு இருந்தன என்பது உங்களுக்கு தெரியும். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இருந்தது போல் இல்லாமல் தற்போது, இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் தணிந்து உள்ளது. இரு நாடுகளையும் நான் சிறப்பாக அனுசரித்துச் செல்கிறேன்.  இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பும் பட்சத்தில் நான் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்து வைக்க உதவத் தயாராகவே இருக்கிறேன். இதை அவர்களும் அறிவார்கள்” என்றார். 

கடந்த இரு வாரங்களுக்கு முன் ஜி 7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் பிரதமர் மோடியும் சந்தித்துக்கொண்டனர். இந்த சந்திப்புக்குப் பிறகு முதல் முறையாக அமெரிக்கா காஷ்மீர் விவகாரம் பற்றி கருத்து கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.  

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கையால், இந்தியா மீது கடும் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான், இந்த விவகாரத்தை உலக நாடுகளிடம் கொண்டு போனது. எனினும், காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவு பாகிஸ்தானுக்குக் கிடைக்காததால், இந்தியாவுக்கு எதிராகப் பதற்றம் அளிக்கும் வகையில் வார்த்தை பிரயோகங்களை அந்நாட்டு அரசியல் தலைவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

Next Story