சதுரங்க கேமரா பம்ப் கொண்ட ஐபோன் 11 அறிமுகம்


சதுரங்க கேமரா பம்ப் கொண்ட ஐபோன் 11 அறிமுகம்
x
தினத்தந்தி 10 Sep 2019 5:26 PM GMT (Updated: 10 Sep 2019 6:52 PM GMT)

ஆப்பிள் நிறுவனத்தின் 2019 சிறப்பு நிகழ்வில் சதுரங்க கேமரா பம்ப் கொண்ட ஐபோன் 11 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கலிபோர்னியா,

ஆப்பிள் நிறுவன அலுவலகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் 2019 ஐபோன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நிகழ்வில் ஆப்பிள் நிறுவன சேவைகளின் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. டிம் குக் அறிமுக உரையுடன் துவங்கிய நிகழ்வில் ஆப்பிள் ஆர்கேட் கேமிங் சேவை முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டது. ஆப்பிள் ஆர்கேட் சேவை செப்டம்பர் 19-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.


 

ஆப்பிள் ஆர்கேட்:

ஆப்பிள் ஆர்கேட் சேவை ஆப் ஸ்டோரில் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள் ஆர்கேட் கேமிங் சேவையுடன் பல்வேறு புதிய கேம்களும் அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிள் ஆர்கேட் சேவையில் ஒவ்வொரு மாதமும் புதிய கேம் சேர்க்கப்பட இருப்பதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. இவற்றில் சில கேம் இன்று முதல் பயனர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேம்களை வழங்க ஆப்பிள் நிறுவனம் பல்வேறு கேமிங் நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டிருக்கிறது. இந்த சேவைக்கான மாத கட்டணம் 499 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் சேவையை ஒரு மாதத்திற்கு இலவசமாக பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.


 

ஆப்பிள் டி.வி. பிளஸ்:

ஆர்கேட் கேமிங் சேவையுடன் ஆப்பிள் டி.வி. பிளஸ் 100 நாடுகளில் கிடைக்கும். இதற்கான மாத கட்டணம் 4.99 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று அறிமுகம் செய்யப்படும் ஆப்பிள் சாதனங்களை வாங்குவோருக்கு ஆப்பிள் டி.வி. பிளஸ் சேவை இலவசமாத வழங்கப்படும் என ஆப்பிள் அறிவித்துள்ளது.



 

2019 ஐபேட்:

ஆப்பிள் நிறுவனம் 2019 ஐபேட் மாடலை அறிமுகம் செய்தது. இதில் இருமடங்கு வேகமான பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஐபேட் வாங்குவோருக்கு ஆப்பிள் டி.வி. பிளஸ் சேவை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது. புதிய ஐபேட் துவக்க விலை 329 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இதன் கட்டணம் மேலும் குறைவாகும்.



 

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5:

புதிய ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதனால் புதிய வாட்ச் சீரிஸ் 5 மாடலின் திரை எப்போதும் ஆன் ஆகியிருக்கும். புதிய ஆப்பிள் வாட்ச் நாள் முழுக்க பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பில்ட்-இன் காம்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் மேம்பட்ட புதிய மேப்ஸ் இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் ஆபத்து காலத்தில் எச்சரிக்கை கொடுக்கும் சர்வதேச அவசர எண்கள் இடம்பெற்றிருக்கிறது.



 

ஐபோன் 11:


ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 11 அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு லென்ஸ்களும் சதுரங்க வடிவம் கொண்ட கேமரா பம்ப்பில் பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் 6.1 இன்ச் லிக்விட் ரெட்டினா எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று வைடு ஆங்கிள் சென்சார் மற்றொன்று அல்ட்ரா வைடு சென்சார் ஆகும். இத்துடன் புகைப்படங்களை அழகாக்க பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.


ஐபோன்களில் முதல் முறையாக செல்ஃபி கேமராவில் ஸ்லோ மோஷன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் இதுவரை வெளியான ஸ்மார்டபோன்களில் அதிக சக்திவாய்ந்ததாகும். புதிய ஐபோன் 11 மாடலில் இதுவரை வெளியான ஸ்மார்ட்போன்களை விட அதிக திறன் கொண்ட கிராஃபிக்ஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஐபோன் முந்தைய ஐபோன் XR மாடலை விட ஒரு மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. புதிய ஐபோன் 11 விலை 699 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.





Next Story