தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குகிறார் கனடா பிரதமர்


தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குகிறார் கனடா பிரதமர்
x
தினத்தந்தி 11 Sep 2019 7:53 AM GMT (Updated: 11 Sep 2019 9:39 AM GMT)

கனடா நாட்டில் நடைபெற இருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்தை கனடா பிரதமர் இன்று தொடங்கினார்.

ஒட்டாவா,

கடந்த 2015 அக்டோபர் 19 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி பெரும் வெற்றி பெற்றதை அடுத்து கனடாவின் பிரதமராகப் ஜஸ்டின் ட்ரூடோ பதவியேற்றார்.

இந்த ஆண்டு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி, 43 ஆவது பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாராளுமன்றத்தை கலைக்குமாறு கவர்னர் ஜூலி பாயேடிடம், கனடாவின் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கேட்டுக் கொண்டார்.

இன்று (செப் 11) முதல் அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கப்படவுள்ளது. லிபரல் கட்சி தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த முறை தங்கள் ஆட்சியின் போது முடிக்கப்பட்ட பணிகள், வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்புகள் உருவாக்கியது முதலியவற்றை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய உள்ளார்.

அதேவேளையில், கன்சர்வேடிவ் கட்சி தலைவரான அண்ட்ரூவ் ஷீர், முதன்முறையாக கட்சி தலைவராக தேர்தலில் போட்டியிட உள்ளார். தனது பிரச்சாரத்தின் போது ஜஸ்டின் ட்ரூடோவின் நெறிமுறைகள் குறித்தும் சர்வதேச அரங்கில் அவரது செயல்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளின்படி ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story