பாகிஸ்தானில் நடைபெறும் கட்டாய மதமாற்றம்- ஐ.நா. பொது சபை கூட்டத்தின் போது போராட்டம் நடத்த முடிவு


பாகிஸ்தானில் நடைபெறும் கட்டாய மதமாற்றம்- ஐ.நா. பொது சபை கூட்டத்தின் போது போராட்டம் நடத்த முடிவு
x
தினத்தந்தி 12 Sep 2019 3:02 AM GMT (Updated: 12 Sep 2019 3:02 AM GMT)

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதை எதிர்த்து ஐ.நா. பொது சபை கூட்டத்தின் போது போராட்டம் நடத்த சிந்து அமைப்பு முடிவு செய்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் 26 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வின் போது பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள இந்து பெண்கள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவதை எதிர்த்து போராட்டம் நடத்த அமெரிக்காவைச் சேர்ந்த சிந்தி அமைப்பு முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தானில் இளம் பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதை எதிர்த்து இந்த அமைப்பு பல முறை கண்டனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொது சபையில் கலந்து கொள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், போராட்டத்தை நடத்த அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.

இது குறித்து சிந்தி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு வருடமும் 12 முதல் 28 வயதுக்குட்பட்ட  சுமார் 1000 பெண்கள் கடத்தப்பட்டு, கட்டாய திருமணம் செய்யப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் அளித்துள்ள தகவலின்படி 2004 ஜனவரி மாதத்திலிருந்து 2018 மே மாதம் வரை, மொத்தம் 7430 சிந்தி இந்து பெண்கள் கடத்தப்பட்டுள்ளதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. அரசியல் தலைவர்களின் உதவியோடு இத்தகைய கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும், பல வழக்குகள் பதியப்படாமல் விடப்பட்டுள்ளதாகவும் சிந்து அமைப்பு தெரிவித்துள்ளது.

Next Story