சீன இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி விதிப்பு 2 வாரங்கள் தள்ளி வைப்பு- அமெரிக்கா


சீன இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி விதிப்பு 2 வாரங்கள் தள்ளி வைப்பு- அமெரிக்கா
x
தினத்தந்தி 12 Sep 2019 4:57 AM GMT (Updated: 12 Sep 2019 6:56 AM GMT)

சீன இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி விதிப்பை 2 வாரங்களுக்கு தள்ளி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஒரு ஆண்டுக்கும் மேலாக வர்த்தக போர் நீடிக்கிறது.

இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு பொருட்களுக்கும், எவ்வளவு வரி விதிப்பது என்பது தொடர்பாக இருநாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகாததே இதற்கு காரணம். இதனால் இருநாடுகளும், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது மாறி மாறி கூடுதல் வரி விதித்து வருகின்றன.

இந்த நிலையில், வர்த்தகப் போர் தொடங்கியதில் இருந்து முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறால், பண்ணை விலங்குகளுக்கான மீன் உணவு, புற்றுநோய்க்கான மருந்து போன்ற 16 வகை பொருட்களுக்கு சீனா வரிவிலக்கு அளித்துள்ளது.

இந்த வரிவிலக்கானது 17-ந்தேதி அமலுக்கு வரும் என்றும், ஒரு ஆண்டுக்கு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த 16 வகை பொருட்களில் 12 பொருட்களுக்கு ஏற்கனவே வரி செலுத்தியவர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், இதர 4 பொருட்களுக்கு செலுத்தப்பட்ட வரிப்பணம் திரும்பக் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில அமெரிக்கப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் சீன வரிவிதிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக வரி அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் சீனாவில் 70வது தேசிய தினம் அக்டோபர் ஒன்றாம் தேதி கொண்டாட இருப்பதால், கூடுதல் வரி விதிப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று சீனாவின் துணை பிரதமர் லியுஜி அமெரிக்காவுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

அதனை ஏற்று நல்லெண்ண நடவடிக்கையாக கூடுதல் வரி விதிப்பு அக்டோபர் ஒன்றாம் தேதிக்குப் பதில் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா - சீனா நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாத மத்தியில் வாஷிங்டனில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டிரம்ப் தனது ட்விட்டரில் கூறி இருப்பதாவது:-

சீனாவின் துணைப் பிரதமர் லியு ஹீவின் வேண்டுகோளின் பேரிலும், சீன மக்கள் குடியரசு அவர்களின் 70 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவார்கள் என்பதாலும் அக்டோபர் 1 ஆம் தேதி, 250 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களின் (25% முதல் 30% வரை) அதிகரித்த வரிகளை  அக்டோபர் 1 முதல் அக்டோபர் 15 வரை த்ள்ளி வைக்க நல்ல விருப்பத்தின் அறிகுறியாக  நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம் என கூறி உள்ளார்.

Next Story