அளவுக்கு மீறிய சிரிப்பு; பெண்ணுக்கு வந்த ஆபத்து


அளவுக்கு மீறிய சிரிப்பு; பெண்ணுக்கு வந்த ஆபத்து
x
தினத்தந்தி 12 Sep 2019 10:50 AM GMT (Updated: 12 Sep 2019 10:50 AM GMT)

சீனாவில் அளவுக்கு மீறிய சிரிப்பினால் பெண் ஒருவருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

பெய்ஜிங்,

சிரிப்பு சிறந்த மருந்து என்று கூறுவார்கள்.  மனிதன் சிரிக்க தெரிந்த விலங்கு என்றும் கூறுவதுண்டு.  ஆனால் அளவுக்கு மீறி சிரித்த பெண் ஒருவருக்கு அதனால் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

சீனாவின் குவாங்டாங்கில் தெற்கு குவாங்ஷு ரெயில் நிலையம் நோக்கி பெண் ஒருவர் ரெயிலில் சென்று கொண்டு இருந்துள்ளார்.  அவர் அருகில் இருந்தவர்களிடம் சிரித்து பேசியபடி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் சத்தம்போட்டு சிரித்ததில் அவரது வாயின் கீழ்புறம் ஒரு பக்கம் திரும்பி கொண்டது.  அந்த பெண்ணால் பேசவோ அல்லது வாயை மூடவோ இயலவில்லை.

நல்லவேளையாக அந்த ரெயிலில் ஒரு மருத்துவர் பயணம் செய்துள்ளார்.  உதவிக்கு வந்த அவர், அந்த பெண்ணுக்கு பக்கவாதம் வந்துள்ளது என முதலில் நினைத்துள்ளார்.  இதன்பின் அவரது ரத்த அழுத்தத்தினை பரிசோதனை செய்துள்ளார்.

அவரிடம் சில கேள்விகளை கேட்டுள்ளார்.  இதன்பின்பே அந்த பெண்ணின் வாயின் கீழ்புறம் திரும்பி உள்ளது என மருத்துவருக்கு தெரிய வந்தது.  இதன்பின் அவர் மேற்கொண்ட முயற்சி அந்த பெண்ணுக்கு பலனளித்தது.  அவரது வாய் இயல்பு நிலைக்கு வந்தது.

பெயர் வெளியிடப்படாத அந்த பெண் மருத்துவரிடம் கூறும்பொழுது, முன்பு ஒரு முறை கர்ப்பிணியாக இருந்தபொழுது வாந்தி வந்தது.  வாந்தி எடுத்ததில், வாயின் கீழ்புறம் திரும்பி கொண்டது என அதிர்ச்சிக்குரிய தகவலை கூறினார்.

Next Story