அமெரிக்க பயணத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிபர் டிரம்பை இரண்டு முறை சந்திக்கிறார்


அமெரிக்க பயணத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிபர் டிரம்பை இரண்டு முறை சந்திக்கிறார்
x
தினத்தந்தி 13 Sep 2019 7:00 AM GMT (Updated: 13 Sep 2019 7:00 AM GMT)

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க பயணத்தின் போது அதிபர் டிரம்பை இரண்டு முறை சந்தித்து பேச உள்ளார்.

இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த வார இறுதியில் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது அமெரிக்க  அதிபர் டொனால்டு டிரம்பை  இம்ரான் கான்  2 முறை சந்தித்து பேசுகிறார். பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான் கான் முதல் முறையாக   ஐநா பொதுச்சபை  அமர்வில் கலந்து கொள்வார் என்று ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இம்ரான் கானின் பயண அட்டவணையின்படி,  இம்ரான் கானும் -டிரம்ப்  இடையிலான முதல் சந்திப்பு மதிய உணவு விருந்துடன் இருக்கும், மற்றொன்று தேநீர் விருந்துடன் இருக்கும் என்று ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதம மந்திரி அமெரிக்காவில் தங்கியிருந்து கலந்து கொள்ளும்  கூட்டங்களின் அட்டவணை இறுதி செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கை கூறுகிறது. அமெரிக்காவிற்கு இம்ரான் கானின் இரண்டாவது முறை பயணம் இதுவாகும்.

ஐ.நா பொதுச்சபையின் 74 வது அமர்வில் கலந்து கொள்ள  இம்ரான் கான் செப்டம்பர் 21-ந் தேதி அன்று நியூயார்க்கிற்கு வருகிறார். அவர் செப்டம்பர் 27-ந் தேதி அன்று  ஐநா பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். ஆகஸ்ட் 2018ல் அவர் பதவியேற்ற பின்னர் இது அவரது முதல் ஐநா பொதுச்சபை அமர்வாகும்.

ஜம்மு காஷ்மீருக்கு  சிறப்பு  அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை ரத்து செய்த விவகாரம்  குறித்து  அவர் ஐநாவில் பேசுவார் என கூறப்படுகிறது.

இம்ரான் கான் கடந்த ஜூலை மாதம் டொனால்டு டிரம்பை சந்தித்தார்.  இதை தொடர்ந்து  டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக கூறினார். மோடி தன்னிடம் மத்தியஸ்தம் செய்யச் சொன்னார் என்ற அதிபர் டிரம்பின் வியக்கத்தக்க கூற்றை இந்திய அரசு மறுத்தது.

Next Story