இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு


இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு
x
தினத்தந்தி 13 Sep 2019 7:36 PM GMT (Updated: 13 Sep 2019 7:36 PM GMT)

இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவை, கனிமொழி எம்.பி. சந்தித்தார்.

கொழும்பு,

தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் ஒரு அங்கமாக இலங்கை பயணம் மேற்கொண்டுள்ள அவர் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இலங்கை மந்திரிகள் திலிப் ஆராய்ச்சி, அமீர் அலி மற்றும் ஜாஹிர் மவுலானா ஆகியோரை சந்தித்து மீனவர்கள் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து கனிமொழி தலைமையிலான குழுவினர், இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவை நேற்று சந்தித்தனர். அப்போது தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தற்போதைய இறுக்கமான சட்டங்களை தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறும், 2 நாட்டு மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகவேண்டும் என்றும் கனிமொழி கோரிக்கை விடுத்தார்.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போது அவர்களுடைய படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன, எனவே அவர்களை விடுவிக்கும்போது படகுகளையும் சேர்த்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ரனில் விக்கிரமசிங்கேவிடம், கனிமொழி கேட்டுக்கொண்டார்.

படகுகள் விடுவிக்கப்படாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறிய கனிமொழி, ஆகவே இதுதொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்து, படகுகளை விடுவிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் இருநாட்டு மீனவ பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தவேண்டும் என்றும் ரனில் விக்கிரமசிங்கேவிடம் கனிமொழி கேட்டுக்கொண்டார்.


Next Story