சுவிட்சர்லாந்தில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ராம்நாத் கோவிந்த்


சுவிட்சர்லாந்தில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ராம்நாத் கோவிந்த்
x
தினத்தந்தி 14 Sep 2019 3:17 PM GMT (Updated: 14 Sep 2019 3:17 PM GMT)

சுவிட்சர்லாந்தின் வில்நியூ நகரில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காந்தி சிலையை திறந்து வைத்தார்.

வில்நியூவே,

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (8-ஆம் தேதி) தனது சுற்றுப் பயணத்தை துவங்கிய அவர் ஐஸ்லாந்தில் இருதரப்பு ஒப்பந்தங்களை நிறைவேற்றிய பிறகு நேற்று  சுவிட்சர்லாந்து சென்றார்.

அவரை சுவிட்சர்லாந்து ஜனாதிபதி உவேலி மௌரர் வரவேற்றார். பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்நிலையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அந்நாட்டின் வில்நியூவே நகரில் ஜெனிவா ஏரிக்கரையில் நிறுவப்பட்ட காந்தி சிலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். அந்த பகுதிக்கு காந்தி சதுக்கம் என்று  பெயரிடப்பட்டதற்கு அந்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார். 

தொடர்ந்து சிலை திறப்பு விழாவில் பேசிய ராம்நாத் கோவிந்த், 

மகாத்மா காந்தியின் வாழ்க்கை நமக்கு பல விஷயங்களைக் கற்பிக்கிறது. அவர் சபர்மதி ஆற்றின் கரையோரத்தில் தான் தனது ஆசிரமத்தை நிறுவினார்.

இன்று, அவரை ஜெனிவா ஏரிக்கரைக்கு கொண்டு வந்துள்ளோம். இயற்கையை நேசித்த, மிகவும் அக்கறை காட்டிய ஒரு மனிதனுக்கு இது ஒரு பொருத்தமான அஞ்சலி ஆகும். 

இயற்கையை நேசிப்பவர்களுக்கும், கால நிலை மாற்றத்தை சமாளிக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் காந்தியின் கொள்கை மிகவும் ஊக்கமளிக்கும்.

மனிதகுல ஒற்றுமையில் மகாத்மா காந்தி நம்பிக்கை வைத்திருந்தார்.  இந்துமதப் பாடல்களையும் மேற்கத்திய பாடல்களையும் சமமாக பாவித்து ரசித்து கேட்டவர். நோபல் பரிசு வென்ற பிரெஞ்ச் நாவல் ஆசிரியர் ரோமைன் ரோலண்ட் அழைப்பின் பேரில் வில்நியூவிற்கு காந்தி 1931 -ம் ஆண்டு வந்தார்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சுற்றுப்பயணத்தின் இறுதியாக நாளை ஸ்லோவேனியாவிற்கு செல்கிறார். செப்டம்பர் 17-ஆம் தேதி தனது  சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து கொண்டு இந்தியா திரும்புகிறார்.

Next Story