காஷ்மீரில் அமைதி நிலவ ஐக்கிய நாடுகள் சபை தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மலாலா


காஷ்மீரில் அமைதி நிலவ ஐக்கிய நாடுகள் சபை தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மலாலா
x
தினத்தந்தி 15 Sep 2019 5:29 PM GMT (Updated: 15 Sep 2019 5:29 PM GMT)

காஷ்மீரில் பள்ளிச்சிறுவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல ஐநா உதவ வேண்டும் என்று மலாலா டுவிட்டரில் தெரிவித்தார்.

லண்டன்,

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் கல்வி உரிமை ஆர்வலருமான மலாலா யூசுப்சாய், காஷ்மீரில் அமைதி ஏற்படுத்தவும், அங்குள்ள குழந்தைகள் மீண்டும் பள்ளி செல்லவும் ஐக்கிய நாடுகள் அவை உதவ வேண்டும் என்று டுவிட்டரில் கோரிக்கை விடுத்து உள்ளார்.  

22-வயதான மலாலா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ”காஷ்மீரில் உள்ள மாணவர்கள் கடந்த 40 நாட்களாகப் பள்ளி செல்ல முடியவில்லை என்று வெளியாகும் தகவல்கள் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சப்படுகின்றனர்.  காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்தவும், அவர்களின் குழந்தைகள் பாதுகாப்பாகப் பள்ளி செல்லவும் ஐக்கிய நாடுகள் அவை மற்றும் பிற தலைவர்கள் செயலாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்து இருந்தார். 

மலாலா யூசுப்சாயின் கருத்துக்கு டுவிட்டரில் கடுமையான எதிர்க்கருத்துக்கள் எழுந்தன. பாகிஸ்தானில் சிறுபான்மையின பெண்களின் நிலை பற்றி எந்த கருத்தையும் கூறாமல் மலாலா அமைதி காப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய இந்தியப் பயனாளர்கள், மலாலாவை கடுமையாகச் சாடினர். 

பாஜக பிரமுகரான சோபா கரன்ந்லாஜ் இது பற்றி தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,  நோபல் பரிசு வென்றவரும் நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர்கள் பற்றிப் பேசுவதற்காகவும் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள். அவரது சொந்த நாட்டில் கட்டாய மதமாற்றம், துன்புறுத்தல் ஆகியவை சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பெண்களுக்கு எதிராக நடைபெறுகிறது.  வளர்ச்சி திட்டங்கள் காஷ்மீருக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன. எந்தவித அடக்குமுறையும் அங்கு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Next Story