இங்கிலாந்தில் தங்க கழிப்பறை கோப்பை திருட்டு


இங்கிலாந்தில் தங்க கழிப்பறை கோப்பை திருட்டு
x
தினத்தந்தி 15 Sep 2019 10:45 PM GMT (Updated: 15 Sep 2019 9:57 PM GMT)

இங்கிலாந்தில் தங்க கழிப்பறை கோப்பை திருடப்பட்டது.

லண்டன்,

இத்தாலியை சேர்ந்த கலைஞர் மரிஷியொ கேட்டலன் என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு 18 கேரட் தங்கத்தால் கழிப்பறை கோப்பையை உருவாக்கினார்.

1.25 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடியே 88 லட்சம்) மதிப்புடைய இந்த தங்க கழிப்பறை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குகன்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த தங்க கழிப்பறை கோப்பை கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த, பிலென்ஹெய்ம் மாளிகைக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த தங்க கழிப்பறை கோப்பை நேற்று முன்தினம் திருட்டுபோனது. அரண்மனையில் போடப்பட்டிருந்த பலத்த பாதுகாப்பையும் மீறி மர்ம ஆசாமிகள் தங்க கழிப்பறை கோப்பையை எப்படி திருடிச் சென்றார்கள் என்பது தெரியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக 65 வயதான அரண்மனை ஊழியர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story