அமெரிக்காவில் ஏழைகள் பசி தீர்க்கும் இலவச ஓட்டல்


அமெரிக்காவில் ஏழைகள் பசி தீர்க்கும் இலவச ஓட்டல்
x

அமெரிக்காவில் ஏழைகள் பசி தீர்க்கும் இலவச ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது.

நியூயார்க்,

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள பிரெவட்டன் நகரில் பிரட்டீ மெக் மில்லன்-லிசா தாமஸ் மெக்மில்லன் என்ற தம்பதி நடத்தி வரும் ஓட்டல் பசியால் வாடும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச மதிய உணவை வழங்கி வருகிறது.

பணி ஓய்வு பெற்ற இந்த தம்பதி தங்களின் ஓய்வூதிய பணத்தை கொண்டு சேவை நோக்கத்துடன் இந்த ஓட்டலை நடத்தி வருகின்றனர். இந்த ஓட்டலில் விலைப்பட்டியல் கிடையாது. உணவு சாப்பிடும் நபர் தாங்கள் கொடுக்க விரும்பும் பணத்தை ஓட்டலில் இருக்கும் நன்கொடை பெட்டியில் போடலாம். அதிலும் அதிகபட்சமாக 5 டாலருக்கு மேல் நன்கொடை பெட்டியில் போடக்கூடாது என்பது மெக் மில்லன் தம்பதியின் கனிவான வேண்டுகோள்.

இதனால் சிலர் பண்டமாற்று முறையில் தாங்கள் சாப்பிடும் உணவுக்காக தங்கள் வீட்டில் விளைவிக்கப்படும் காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கி செல்கின்றனர். மேலும் சிலர் ஓட்டலில் உணவு பரிமாறுவது உள்ளிட்ட தங்களால் முடிந்த வேலை செய்து கொடுக்கின்றனர்.

தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் வரிசையில் காத்திருந்து சாப்பிட்டு செல்கின்றனர். அதிகமாக நன்கொடை பெறுவதை தவிர்த்தாலும் சிலர் தபால் மூலம் காசோலையில் நன்கொடை அனுப்பிவருவதாகவும், அதில் அதிகபட்சமாக ஒரு முறை 1,000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.71 ஆயிரத்து 800) கிடைத்ததாகவும் மெக்மில்லன் தம்பதி கூறுகின்றனர்.

இதுபற்றி அவர்கள் மேலும் கூறுகையில், “இதற்கு முன், கல்லூரியில் ஏழை மாணவர்களுக்காக இலவச ஓட்டல் நடத்தி வந்தோம். முதியவர்களும் பயன்பெறும் வகையில் இந்த ஓட்டலை தொடங்கி நடத்தி வருகிறோம். ஏழைகளுக்கு உணவளிப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நாங்கள் தேவைக்கு உணவளிக்கிறோம். இதுவே எங்கள் குறிக்கோள்” என்றனர்.


Next Story