அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் ஓ பிரையன் தேர்வு


அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் ஓ பிரையன் தேர்வு
x
தினத்தந்தி 19 Sep 2019 5:28 AM GMT (Updated: 19 Sep 2019 5:28 AM GMT)

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் ஓ பிரையன் என்பவரை அதிபர் டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜான் போல்டன் கடந்த 11ந்தேதி அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.  தனது பல ஆலோசனைகளுக்கு போல்டன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், அரசு நிர்வாகத்துடன் அவரது செயல்பாடுகள் ஒத்து போகவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டாக கூறினார்.

இதனிடையே, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு, ராபர்ட் ஓ பிரையன், ரிக் வாடெல், லிசா கார்டன்-ஹேகர்டி, பிரெட் பிளீட்ஜ் மற்றும் கெய்த் கெல்லாக் ஆகிய 5 பேர் கொண்ட பட்டியலை அதிபர் டிரம்ப் தேர்வு செய்துள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.  எனினும், இது முழுமையான பட்டியல் இல்லை என்றும் தெரிவித்தது.

இதனிடையே, 5 பேர் கொண்ட பட்டியலில் ஒருவரான ராபர்ட் ஓ பிரையன் என்பவரை அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அதிபர் டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.  பிரையன், கடந்த 2 வருடங்களில் இந்த பதவிக்கு தேர்வாகியுள்ள 4வது நபராவார்.

சவுதி எண்ணெய் நிறுவனங்கள் மீது நடந்த தாக்குதலால் ஈரானுடனான பதற்றம் நிறைந்த சூழ்நிலை மற்றும் தலீபான்களுடனான பேச்சுவார்த்தையில் தற்காலிக நிறுத்தம் ஏற்பட்டு ஆப்கானிஸ்தானில் நிச்சயமற்ற சூழல் நிலவும் நிலையில் பிரையன் இந்த பதவிக்கு தேர்வாகியுள்ளார்.

இதுபற்றி பிரையன் கூறும்பொழுது, அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் ராணுவத்தினை மீண்டும் கட்டமைப்பது ஆகியவற்றில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும்.  சவுதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை பற்றி தனிப்பட்ட முறையில் டிரம்புக்கு ஆலோசனை வழங்குவேன் என்று கூறினார்.

Next Story