ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீது நடந்த தற்கொலை தாக்குதலில் 20 பேர் பலி


ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீது நடந்த தற்கொலை தாக்குதலில் 20 பேர் பலி
x
தினத்தந்தி 19 Sep 2019 6:44 AM GMT (Updated: 19 Sep 2019 6:44 AM GMT)

ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை ஒன்றின் மீது நடந்த தற்கொலை தாக்குதலில் 20 பேர் பலியாகி உள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானின் தெற்கே ஜாபுல் மாகாணத்தில் குவாலத் நகரில் அமைந்துள்ள மருத்துவமனை மீது இன்று சக்தி வாய்ந்த வெடிகுண்டு நிரப்பிய லாரி ஒன்றை மோதி வெடிக்க செய்து தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் 20 பேர் பலியாகினர்.  90 பேர் காயமடைந்துள்ளனர்.  இந்த தாக்குதலில் அங்கு வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்த ஆம்புலன்சுகள் நொறுங்கி சிதறின.  மருத்துவமனையில் தங்களது குடும்ப உறுப்பினர்களை காண சென்ற பலர், காயமடைந்தோரை போர்வைகள் மற்றும் துணிகளை கொண்டு தூக்கி சென்றனர்.

பலத்த காயமடைந்தோரை அருகே கந்தஹார் நகரிலுள்ள மருத்துமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை இந்த மாத தொடக்கத்தில் தற்காலிக நிறுத்தம் ஏற்பட்டு, ஆப்கானிஸ்தானில் நிச்சயமற்ற சூழல் நிலவி வருகிறது.  இந்நிலையில், நாள்தோறும் என்ற அடிப்படையில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  இதனிடையே இன்று நடந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்று கொண்டுள்ளனர்.

அருகிலுள்ள அரசு உளவு துறை கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்துவதே எங்களது இலக்கு என தலீபான்கள் தெரிவித்து உள்ளனர்.  எனினும் இந்த தாக்குதலில் தேசிய பாதுகாப்பு துறை கட்டிடம் சேதமடைந்து உள்ளது.  இதில் அதிகாரிகள் யாரும் காயம் அடைந்துள்ளனரா என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

Next Story