மும்பை தாக்குதல் போல் மீண்டும் நடந்தால் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க மன்மோகன் சிங் விரும்பினார் - இங்கிலாந்து முன்னாள் பிரதமர் தகவல்


மும்பை தாக்குதல் போல் மீண்டும் நடந்தால் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க மன்மோகன் சிங் விரும்பினார் - இங்கிலாந்து முன்னாள் பிரதமர் தகவல்
x
தினத்தந்தி 19 Sep 2019 11:30 PM GMT (Updated: 19 Sep 2019 8:18 PM GMT)

மும்பை தாக்குதல் போல் மீண்டும் நடந்தால், பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என்று மன்மோகன் சிங் கூறியதாக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.

லண்டன், 

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த வாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் என்று பெரும்பாலானோர் வாக்களித்த மறுநாளே பதவி விலகியவர்.

பிரதமராக இருந்த 2010-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை, தனது சொந்த மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்த நினைவுகளை டேவிட் கேமரூன் ‘பார் த ரெக்கார்டு‘ என்ற பெயரில் புத்தகமாக எழுதி உள்ளார். அந்த புத்தகத்தை நேற்று வெளியிட்டார்.

அதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் மோடி பற்றிய அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஒரு துறவி போன்றவர். ஆனால், இந்தியாவுக்கான அச்சுறுத்தல் விஷயத்தில், கொதித்து எழுந்து விடுவார்.

கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் நான் இந்தியாவுக்கு சென்றபோது, அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை சந்தித்தேன். அவர், “2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதல் போல் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால், பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்” என்று என்னிடம் கூறினார்.

அதுபோல், இந்தியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்ற மோடி, 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் இங்கிலாந்துக்கு வந்தார். வெம்ப்ளி மைதானத்தில் நடந்த கூட்டத்தில், இங்கிலாந்துவாழ் இந்தியர்கள் சுமார் 60 ஆயிரம்பேர் பங்கேற்றனர். அதில், மோடியுடன் நானும் கலந்து கொண்டேன்.

விழாவில், மோடியை நான் கட்டிப்பிடித்தபோது, பலத்த கைதட்டல் எழுந்தது. இங்கிலாந்துவாழ் இந்தியர் என்றாவது ஒருநாள் இங்கிலாந்து பிரதமராக வேண்டும் என்று நான் கூறியபோதும் நல்ல வரவேற்பு இருந்தது.

2013-ம் ஆண்டு நான் இந்தியாவுக்கு வர்த்தக குழுவுடன் பயணம் செய்தேன். பொற்கோவிலுக்கு செல்லுமாறு இங்கிலாந்துவாழ் இந்திய நண்பர்கள் பலர் நீண்டகாலமாக என்னிடம் வற்புறுத்தி வந்தனர். அதனால் பொற்கோவிலுக்கு சென்றேன்.

ஆங்கிலேய ஆட்சியில் ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த இடத்துக்கும் சென்றேன். அந்த படுகொலைக்கு நான் மன்னிப்பு கேட்க வேண்டுமா என்பது பற்றி இங்கிலாந்தில் விவாதம் நடந்தது.

‘ஜாலியன்வாலா பாக் படுகொலை வெட்கக்கேடானது‘ என்று பார்வையாளர் புத்தகத்தில் எனது கருத்தை பதிவு செய்தேன். அதற்கு வருத்தமும் தெரிவித்தேன். இதன்மூலம், பதவியில் உள்ள இங்கிலாந்து பிரதமர் யாரும் அமிர்தசரஸ் சென்றது இல்லை, படுகொலைக்கு வருத்தம் தெரிவித்தது இல்லை என்ற குறையை போக்கினேன்.

இவ்வாறு டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.

Next Story