இஸ்ரேலில் புதிய அரசை அமைப்பதில் தொடரும் சிக்கல் - கூட்டணி ஆட்சிக்கான அழைப்பை எதிர்க்கட்சி தலைவர் நிராகரிப்பு


இஸ்ரேலில் புதிய அரசை அமைப்பதில் தொடரும் சிக்கல் - கூட்டணி ஆட்சிக்கான அழைப்பை எதிர்க்கட்சி தலைவர் நிராகரிப்பு
x
தினத்தந்தி 20 Sep 2019 10:57 PM GMT (Updated: 20 Sep 2019 10:57 PM GMT)

இஸ்ரேலில் கூட்டணி ஆட்சிக்கான அழைப்பை எதிர்க்கட்சி தலைவர் நிராகரித்துள்ளதால், புதிய அரசை அமைப்பதில் சிக்கல் தொடர்ந்து வருகிறது.

ஜெருசலேம்,

இஸ்ரேலில் கடந்த செவ்வாய்க்கிழமை பொதுத்தேர்தல் நடந்தது. இது 5 மாதங்களில் நடந்த 2-வது பொதுத்தேர்தல் ஆகும். 97 சதவீத வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிகுட் கட்சி 31 இடங்களிலும், பிரதான எதிர்க்கட்சியான புளூ அன்ட் ஒயிட் கட்சி 33 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை என்கிற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் 3-வது முறையாக நாடாளுமன்ற தேர்தலை நாடு சந்திக்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. இதனை தவிர்க்க எதிர்க்கட்சியான புளூ அன்ட் ஒய்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய அரசை உருவாக்க பிரதமர் நேட்டன்யாஹூ முடிவு செய்தார்.

அதன்படி கூட்டணி அமைப்பதற்காக புளூ அன்ட் ஒய்ட் கட்சி தலைவரும், முன்னாள் ராணுவ தளபதியுமான பென்னி கான்ட்சுக்கு, நேட்டன்யாஹூ அழைப்பு விடுத்தார்.

ஆனால் அந்த அழைப்பை பென்னி கான்ட்ஸ் ஏற்க மறுத்துவிட்டார். தனது தலைமையில் ஐக்கிய அரசை உருவாக்க தான் விரும்புவதாகவும், வேண்டுமானால் அந்த அரசில் நேட்டன்யாஹூ இணைந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story