அமெரிக்காவில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி; வியந்த நெட்டிசன்கள்


அமெரிக்காவில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி; வியந்த நெட்டிசன்கள்
x
தினத்தந்தி 22 Sep 2019 1:59 AM GMT (Updated: 22 Sep 2019 1:59 AM GMT)

அமெரிக்காவில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடியை நெட்டிசன்கள் வியந்து புகழ்ந்துள்ளனர்.

ஹூஸ்டன்,

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

அமெரிக்காவில் வருகிற 27ந்தேதி வரை தங்கியிருக்கும் அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.  இதன்படி, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் ஹவுடி-மோடி என்ற நிகழ்ச்சியில் இன்று பங்கேற்கிறார்.  அமெரிக்க அதிபர் டிரம்பும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.  இந்திய வம்சாவளியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சியில் அவர்கள் முன் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இதனிடையே, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சென்றடைந்த பிரதமர் மோடியை வரவேற்க இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் விமான நிலையத்தில் தயாராக இருந்தனர்.

விமானத்தில் இருந்து பிரதமர் மோடி கீழே இறங்கியதும் அவருக்கு பெண் அதிகாரி ஒருவர் பூங்கொத்துகளை வழங்கினார்.  அதில் இருந்த சில பூக்கள் சிவப்பு கம்பளத்தில் விழுந்தன.  உடனடியாக பிரதமர் மோடி கீழே குனிந்து அந்த பூக்களை எடுத்து தனது பாதுகாப்பு அதிகாரியிடம் அளித்து விட்டார்.

பிரதமர் மோடியை சுற்றி அவருக்கு பணியாற்றும் வகையில் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்தபொழுதும், அதனை பற்றி கவலை கொள்ளாமல் அவர் எளிமையாக நடந்து கொண்ட விதம் பற்றிய இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

இது நெட்டிசன்களிடையே பிரதமரை உயர்வாக எண்ணும் வகையில் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தி விட்டது.  இதுபற்றி டுவிட்டரில் ஒருவர், செடியின் ஒரு பகுதியான பூவை காலால் நசுக்கி விட கூடாது என்ற நம்பிக்கையிலா? அல்லது தூய்மை திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த செயலா? என தெரிவித்துள்ளார்.

இதேபோன்று மற்றொருவர், தனக்கு வழங்கிய பூங்கொத்துகளில் இருந்து கீழே விழுந்த ஒரு பூவையோ அல்லது செடியின் தண்டையோ உடனடியாக பிரதமர் மோடி எடுத்து தனது பாதுகாவலரிடம் கொடுப்பது என்பது அவரது எளிமையை காட்டுகிறது என தெரிவித்து உள்ளார்.

பிரதமரின் இந்த செயலானது, அவர் எந்தவொரு நிகழ்ச்சி நிரலையும் பற்றி பொருட்படுத்துபவர் இல்லை என்பதும், மக்களுடன் மக்களாக இணைந்து இருப்பவர் என்பதனையும் காட்டுகிறது என்று மற்றொருவர் தெரிவித்து உள்ளார்.

Next Story