ஐ.நா.வில் பேசிய மாணவி குறித்த டிரம்ப் விமர்சனத்துக்கு எதிர்ப்பு


ஐ.நா.வில் பேசிய மாணவி குறித்த டிரம்ப் விமர்சனத்துக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 25 Sep 2019 11:30 PM GMT (Updated: 25 Sep 2019 10:32 PM GMT)

பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா. மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சுவீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், பள்ளி மாணவியுமான கிரேட்டா தன்பெர்க் உலக தலைவர்களை கடுமையாக சாடினார்.

வாஷிங்டன், 

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளால் எதிர்கால தலைமுறையினர் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கிரேட்டா தன்பெர்க் சற்று கோபத்துடனும், கண்ணீருடனும் வெளிப்படுத்தினார். அவரது இந்த பேச்சு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கிரேட்டா தன்பெர்க் பேசிய வீடியோவை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் பகிர்ந்து, “இந்த சிறுமி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். பார்ப்பதற்கு அருமையாக உள்ளது. இவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது” என விமர்சித்து பதிவிட்டார்.

அதனை தொடர்ந்து பருவநிலை மாற்ற பாதிப்பு மற்றும் எதிர்காலம் குறித்து கண்ணீருடன் சிறுமி பேசும் வீடியோவை டிரம்ப் கேலி செய்வதாக இணைய ஆர்வலர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். ஒரு ஜனாதிபதி இப்படி நடந்து கொள்வது அழகல்ல என்று பலரும் கருத்து பதிவிட்டனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி டிரம்பின் டுவிட்டர் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிரேட்டா தன்பெர்க் டுவிட்டரில் தனது சுயவிவரத்தை மாற்றியுள்ளார். அதில் அவர் “நான் மகிழ்ச்சியான இளம்பெண். நல்ல எதிர்காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்” என குறிப்பிட்டுள்ளார்.

Next Story