காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தராக செயல்பட தயார் - டிரம்ப் மீண்டும் அறிவிப்பு


காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தராக செயல்பட தயார் - டிரம்ப் மீண்டும் அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Sep 2019 11:15 PM GMT (Updated: 26 Sep 2019 8:23 PM GMT)

காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடுவராகவோ, மத்தியஸ்தராகவோ செயல்பட தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார்.

நியூயார்க், 

காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதில் இருந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒரு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக்க முயற்சி செய்துவருகிறது. அதேசமயம் காஷ்மீர் பிரச்சினை இருநாடுகள் இடையிலானது, இதில் 3-வது நாடு தலையிடுவதை விரும்பவில்லை. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது எங்கள் உள்நாட்டு பிரச்சினை என இந்தியா தரப்பில் ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் இடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் பயங்கரவாதம் மற்றும் இந்தியா-அமெரிக்கா இடையேயான இருநாட்டு ஒப்பந்தங்கள் ஆகியவை குறித்து முக்கியமாக இருவரும் விவாதித்தனர். டிரம்ப் முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானையும் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் இடையே இந்தியா, பாகிஸ்தான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது மிகவும் பலனளிக்கக்கூடியதாக இருந்தது. இந்தியா, பாகிஸ்தான் தலைவர்களுடன் காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசும்போது, நான் எந்தவகையில் உதவி செய்ய முடியுமோ அதற்கு தயார். அது ஒரு நடுவராகவோ அல்லது மத்தியஸ்தராகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்வதற்கு தயார். ஏனென்றால் இப்போது அவர்கள் இருவரும் இந்த விஷயத்தில் மிகவும் தீவிர முரண்பாடுகளுடன் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் ஒரு சுமுகநிலை விரைவில் உருவாகும் என நம்புகிறேன். இரு நாடுகளின் தலைவர்களும் எனக்கு சிறந்த நண்பர்கள் தான்.

நீங்கள் இருவரும் பேசி இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வுகாணுங்கள் என்றும் அவர்களிடம் கூறியுள்ளேன். இரண்டு நாடுகளும் அணுகுண்டுகள் வைத்திருக்கும் நாடுகள். எனவே இந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

இவ்வாறு டிரம்ப் கூறினார்.

அவர் காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வதாக இப்போது அறிவித்திருப்பது 4-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் அறிவிப்பு பற்றி இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமாரிடம் கேட்டபோது, “இதுபற்றி பிரதமர் ஏற்கனவே தெளிவாக கூறியிருக்கிறார். வெளியுறவு செயலாளரும் அதையே சமீபத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். எனவே அந்த நிலையே தொடருகிறது” என்றார்.

இந்திய வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே டிரம்ப்-மோடி பேச்சுவார்த்தைக்கு பின்னர் நிருபர்களிடம் கூறும்போது, “பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் அது நடக்க வேண்டும் என்றால், பாகிஸ்தான் பயங்கரவாதம் தொடர்பாக சில உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கைகளை எடுக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாக எங்களுக்கு தெரியவில்லை” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நரேந்திர மோடி, இம்ரான்கான் ஆகிய இருவரும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பேச இருக்கிறார்கள்.

Next Story