என்னை பதவியை விட்டு நீக்க அமெரிக்க நாடாளுமன்றம் விசாரணை நடத்துவது வேடிக்கையானது - டிரம்ப் கருத்து


என்னை பதவியை விட்டு நீக்க அமெரிக்க நாடாளுமன்றம் விசாரணை நடத்துவது வேடிக்கையானது - டிரம்ப் கருத்து
x
தினத்தந்தி 27 Sep 2019 12:15 AM GMT (Updated: 27 Sep 2019 3:54 AM GMT)

என்னை பதவியை விட்டு நீக்க அமெரிக்க நாடாளுமன்றம் விசாரணை நடத்துவது வேடிக்கையானது என அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்து உள்ளார்.

நியூயார்க், 

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட உள்ள ஜனாதிபதி டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஜோ பிடெனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், உக்ரைனில் பணியாற்றிய அவரது மகனுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை டிரம்ப் மிரட்டினார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது பதவி ஏற்பின்போது டிரம்ப் அளித்த உறுதிமொழியை மீறிய செயல் என கூறி அவரை பதவியை விட்டு நீக்குவதற்கான விசாரணையை அமெரிக்க நாடாளுமன்றத்தில் (பிரதிநிதிகள் சபை) ஜனநாயக கட்சி தொடங்கி உள்ளது.

இந்த விசாரணை வேடிக்கையானது என டிரம்ப் கருத்து கூறி நிராகரித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “இந்த சூனிய வேட்டையில் அவர்கள் (ஜனநாயக கட்சியினர்) தீவிரம் காட்டுகிறார்கள். ஆனால் இது வேடிக்கையானது” என தெரிவித்தார்.

Next Story