பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி நியூசிலாந்தில் பிரம்மாண்ட பேரணி


பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி நியூசிலாந்தில் பிரம்மாண்ட பேரணி
x
தினத்தந்தி 27 Sep 2019 7:19 AM GMT (Updated: 27 Sep 2019 7:19 AM GMT)

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி நியூசிலாந்தில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

வெல்லிங்டன்,

ஸ்வீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி கிரேட்டா தன்பர்க், உலக  வெப்பமயமாதலுக்கு எதிராக அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். பருவ நிலை தொடர்பான ஐநா உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய கிரேட்டா தன்பர்க், பருவ நிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் மத்தியில் பேசினார்.

இதற்கு மத்தியில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, குளோபல் பருவ நிலை ஸ்டிரைக் என்ற பெயரில் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த  போராட்டத்தில் உலக அளவில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  இந்த நிலையில், நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகள், இந்த போராட்டத்தை 2-வது கட்டமாக முன்னெடுத்துச் செல்ல திட்டமிட்டது.

இதன்படி, இன்று நியூசிலாந்தில் பருவ நிலை மாற்றம் தொடர்பாக உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. அந்நாட்டு பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்றனர். நியூசிலாந்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணிகளில் இதுவும் ஒன்று என அந்நாட்டு ஊடகங்கள் வர்ணித்தன. பிரம்மாண்ட பேரணியை முன்னிட்டு நியூசிலாந்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

Next Story