அரசு எதிர்ப்பு போராட்டத்தை கட்டுப்படுத்த ஹாங்காங்கில் முகமூடி அணிய தடை


அரசு எதிர்ப்பு போராட்டத்தை கட்டுப்படுத்த ஹாங்காங்கில் முகமூடி அணிய தடை
x
தினத்தந்தி 5 Oct 2019 5:00 AM IST (Updated: 5 Oct 2019 4:51 AM IST)
t-max-icont-min-icon

ஹாங்காங்கில் அரசு எதிர்ப்பு போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக முகமூடி அணிய தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

ஹாங்காங்,

ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டதிருத்த மாசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் மாதம் ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹாங்காங்கையே உலுக்கிய இந்த போராட்டத்துக்கு அடிபணிந்த அரசு கைதிகள் பரிமாற்ற சட்டதிருத்த மாசோதா ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.

எனினும் போராட்டக்காரர்கள் சீனாவிடம் இருந்து ஜனநாயக உரிமைகள் கோரி போராட்டத்தை விரிவுபடுத்தினர். ஆரம்பத்தில் வார இறுதி நாட்களில் மட்டும் நடந்து வந்த இந்த போராட்டம் தற்போது வாரத்தின் அனைத்து நாட்களிலும் நடந்து வருகிறது.

போராட்டத்தில் ஈடுபடும் பெரும்பாலானோர் போலீசார் தங்களை அடையாளம் காணாமல் இருக்கவும், கண்ணீர் புகைகுண்டுகளில் இருந்து தப்பிக்கவும் முகமூடிகளை அணிந்து கொண்டே போராடுகிறார்கள்.

இந்த போராட்டம் தொடங்கிய நாள் முதலே போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வந்தாலும், கடந்த செவ்வாய்க் கிழமை சீன தேசிய தினத்தின் போது நடந்த போராட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் வன்முறை வெடித்தது. இதில் முதல் முறையாக போலீசார் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் போராட்டக்காரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இந்த சம்பவத்தினால் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்தின் வீரியத்தை குறைக்கும் வகையில் ஹாங்காங்கில் முகமூடி அணிய நிர்வாக தலைவர் கேரி லாம் தடைவிதித்துள்ளார். காலனித்துவ கால அவசர சட்டத்தை பயன்படுத்தி இந்த தடையை அவர் கொண்டு வந்துள்ளார்.

அவசரகால ஒழுங்குமுறை கட்டளை என்ற பெயரில் 1922-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக தற்போது பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு முன் பிராந்தியத்தின் வர்த்தக மையத்தில் கலவரங்களை தடுக்க கடந்த 1967-ம் ஆண்டு இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அரசு எதிர்ப்பாளர்களின் போராட்டம் ஹாங்காங்கை அழித்து வருவதாலும், நிலைமை மேலும் மோசமாகி விட கூடாது என்பதாலும் இந்த தடை அமல்படுத்தப்படுவதாக கேரி லாம் கூறினார். மேலும் முகமூடி தடை இன்று (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என அவர் குறிப்பிட்டார்.

முகமூடி தடை குறித்து ஹாங்காங் பாதுகாப்பு செயலாளர் ஜான் லீ கூறுகையில், “அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத பொதுக் கூட்டங்கள், பேரணிகள், அணிவகுப்புகள், சட்டவிரோத கூட்டங்கள் மற்றும் கலவரங்களுக்கும் இந்த தடை பொருந்தும். முகத்தில் வண்ணம் பூசுவது உள்பட அனைத்து வகையான முக மறைப்பையும் இந்த தடை உள்ளடக்கியது” என கூறினார்.

அதே சமயம் முகமூடி தடையை செயல்படுத்தவது கடினமாகவும் மற்றும் மிகவும் சர்ச்சைக்குரியதாகவும் இருக்கும் என சர்வதேச நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே போல் முகமூடிகளுக்கான தடை சர்வாதிகார போக்கின் வெளிப்பாடு என கருத்து தெரிவித்துள்ள போராட்டக்காரர்கள் இந்த தடையை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் முகமூடி அணியாமல் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இனிமேல் அரசாங்கத்தை மீறி முகமூடிகளை அணிய வேண்டும் என அழைப்பு விடுத்து உள்ளனர். அதன்படி முகமூடி தடைக்கான அறிவிப்பு வெளிவந்தவுடன் நேற்று ஜனநாயக ஆர்வலர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு வீதிகளில் இறங்கி போராட் டம் நடத்தினர்.


Next Story