அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சு தோல்வி - வடகொரியா தகவல்


அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சு தோல்வி - வடகொரியா தகவல்
x
தினத்தந்தி 6 Oct 2019 11:03 PM GMT (Updated: 6 Oct 2019 11:03 PM GMT)

அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சு தோல்வியில் முடிந்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

ஸ்டாக்ஹோம்,

அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சுவார்த்தை சுவீடனில் 5-ந்தேதி நடைபெறும் என வடகொரியா அண்மையில் அறிவித்தது. அமெரிக்காவும் அதனை உறுதி செய்தது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட சில மணி நேரத்துக்குள்ளாக வடகொரியா, நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணையை ஏவி சோதித்தது. இதனால் இரு தரப்பு பேச்சுவார்த்தை தடைபடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான அணு ஆயுத பேச்சுவார்த்தை சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் அருகே உள்ள லிடின்கோ என்ற தீவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு தலைவர்களும் பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக, வடகொரியா சார்பில் மூத்த தூதர் கிம் மியோங் கில்லும், அமெரிக்கா சார்பில் வட கொரியாவிற்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீபன் பீகனும் கலந்து கொண்டனர். சில மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.

எனினும் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக வடகொரியா தெரிவித்தது. பேச்சுவார்த்தைக்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய கிம் மியோங் கில் “பேச்சுவார்த்தை எங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. எனவே பேச்சுவார்த்தை முறிந்தது. அமெரிக்கா தனது பழைய கண்ணோட்டத்தையும், அணுகுமுறையையும் கைவிடவில்லை” என கூறினார்.

ஆனால் இதை அமெரிக்கா மறுத்துள்ளது. பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்ததாக அமெரிக்கா கூறுகிறது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்கா ஆக்கப்பூர்வமான யோசனைகளை கொண்டு வந்தது. அதன் மூலம் வடகொரியாவுடன் நல்ல கலந்துரையாடல்களை நடத்தியது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story