முதல் ரபேல் போர் விமானத்தைப் பெற்றுக்கொண்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்


முதல் ரபேல் போர் விமானத்தைப் பெற்றுக்கொண்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்
x
தினத்தந்தி 8 Oct 2019 12:05 PM GMT (Updated: 8 Oct 2019 12:26 PM GMT)

பிரான்ஸ் நாட்டின் போர்டோவில் இந்திய விமானப்படைக்காக வாங்க உள்ள 36 விமானங்களில் முதல் ரபேல் போர் விமானத்தைப் பெற்றுக்கொண்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்.

பாரீஸ்

இந்திய விமானப் படைக்கான முதல் ரபேல் போர் விமானத்தைப் பெற்றுக் கொள்வதற்காக பிரான்ஸ் சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்திய விமானப் படைக்கு சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு கடந்த 2016ஆம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் ரபேல் போர் விமானத்தை பெற்றுக் கொள்வதற்காக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று பிரான்ஸ் புறப்பட்டார்.

அவரது மூன்று நாள் அரசு முறைப் பயணத்தின் முதற்கட்டமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை பாரிசில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இருநாடுகள் இடையே பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பாக இந்தப் பேச்சுவார்த்தை அமைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ரபேல் விமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கான நிகழ்ச்சி நடைபெறும் மெரிக்னாக் நகருக்கு அவர் சென்றார். வெலிஸி - வில்லாகூப்லே  விமானப் படைத் தளத்திற்குச் சென்ற அவரை, அந்நாட்டு விமானப் படை உயர் அதிகாரிகள் வரவேற்றனர். 

இதை அடுத்து அந்நாட்டு ராணுவ விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணித்தார். அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபடி அவர் விமானத்தில் பயணம் செய்தார். மெரிக்னாக் நகரில் ரபேல் போர் விமானத்திற்கு ஆயுத பூஜை நடத்தப்பட்டது. அது நிறைவடைந்த பின்னர், 2 இருக்கைகள் கொண்ட அந்த விமானத்தில் ராஜ்நாத் சிங் பறந்தார். பின்னர் அங்கு  முதல்  ரபேல் விமானத்தை ராஜ்நாத் சிங் பெற்றுக் கொண்டார்.

Next Story