இயற்பியல் நோபல் பரிசு: 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு


இயற்பியல் நோபல் பரிசு: 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Oct 2019 9:30 PM GMT (Updated: 8 Oct 2019 8:32 PM GMT)

இயற்பியல் நோபல் பரிசு, 3 பேருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது.

ஸ்டாக்ஹோம்,

உலகளவில் மருத்துவம், வேதியியல், இயற்பியல், சமாதானம், இலக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இந்த பரிசு 9 லட்சத்து 14 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.6 கோடியே 40 லட்சம்) ரொக்கம், ஒரு தங்க பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டதாகும்.

இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு நேற்று முன்தினம், சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது.

இந்த பரிசை அமெரிக்க விஞ்ஞானிகள் வில்லியம் கலின், கிரேக் செமன்சா, இங்கிலாந்தின் சர் பீட்டர் ரேட்கிளிப் ஆகிய 3 பேரும் கூட்டாக பகிர்ந்து கொள்கிறார்கள்.

உடலில் உள்ள செல்கள், ஆக்சிஜனை எப்படி உணர்கின்றன, எப்படி மாறுபடுகிற ஆக்சிஜன் அளவுக்கு ஏற்ப செல்கள் தங்களை பொருத்திக்கொள்கின்றன என்பது தொடர்பான கண்டுபிடிப்பை செய்ததற்காக இவர்களுக்கு இந்த ஆண்டின் மருத்துவ நோபல் பரிசு வழங்கப்படுவதாக ராயல் சுவீடிஷ் அறிவியல் அகாடமி அறிவித்துள்ளது. இவர்களது இந்த கண்டுபிடிப்பு, அனிமியா என்று அழைக்கப்படுகிற ரத்த சோகைக்கும், புற்றுநோய்க்கும் புதிய சிகிச்சைகளுக்கு வழி வகுக்கிறது.

3 விஞ்ஞானிகளில் வில்லியம் கலின், அமெரிக்காவில் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள ஹோவர்ட் ஹியூஸ் மருத்துவ இன்ஸ்டிடியூட்டிலும், கிரேக் செமன்சா, மேரிலாந்து மாகாணத்தில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் செல் என்ஜினீயரிங் இன்ஸ்டிடியூட்டிலும், சர் பீட்டர் ரேட்கிளிப் லண்டனில் உள்ள பிரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிடியூட்டிலும் பணியாற்றுகிறார்கள்.

இவர்கள் மூவருக்கும் பரிசு தொகையான 9 லட்சத்து 14 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.6 கோடியே 40 லட்சம்) சமமாக பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

மருத்துவத்தை தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது. இந்தப் பரிசும் 3 பேருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது.

அவர்கள் கனடிய அமெரிக்க அண்டவியல் ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் பீபிள்ஸ், சுவீஸ் நாட்டின் வானியலாளர்கள் மைக்கேல் மேயர், டிடியர் கியூலோஸ் ஆவர்.

ஜேம்ஸ் பீபிள்சுக்கு நோபல் பரிசில் பாதியளவு வழங்கப்படுகிறது.

இவர், ‘பிக் பேங்’ என்று அழைக்கப்படுகிற பெரு வெடிப்புக்கு பிறகு இந்த பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பதை பற்றிய நமது புரிதலுக்கு பங்களித்த தத்துவார்த்த கண்டுபிடிப்புகளை செய்ததற்காக இப்பரிசு தரப்படுவதாக நோபல் பரிசை வழங்குகிற ராயல் சுவீடிஷ் அறிவியல் அகாடமி கூறுகிறது.

மைக்கேல் மேயர், டிடியர் கியூலோசைப் பொருத்தமட்டில், இவர்கள் நோபல் பரிசின் பாதியை பகிர்ந்து கொள்கின்றனர். இவர்கள், நமது சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள ஒரு கோளினை 1995-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெறுகின்றனர்.

ஜேம்ஸ் பீபிள்ஸ், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.

மைக்கேல் மேயரும், டிடியர் கியூலோசும் ஜெனீவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள்.

மொத்த பரிசு பணமான 9 லட்சத்து 14 ஆயிரம் டாலரில் (சுமார் ரூ.6 கோடியே 40 லட்சம்) பாதியை ஜேம்ஸ் பீபிள்சும், மீதி பாதியை மைக்கேல் மேயரும், டிடியர் கியூலோசும் பகிர்ந்து கொள்கின்றனர்.

நோபல் பரிசளிப்பு விழா, ஸ்டாக்ஹோமில் டிசம்பர் 10-ந் தேதி நடக்கிறது. சுவீடன் மன்னர் 16-ம் காரல் குஸ்டாப், நோபல் பரிசுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

Next Story