பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்யும் நாடுகளுக்கு இந்தியா கண்டனம் - ஐ.நா.வில் பதிவு செய்தது


பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்யும் நாடுகளுக்கு இந்தியா கண்டனம் - ஐ.நா.வில் பதிவு செய்தது
x
தினத்தந்தி 11 Oct 2019 11:15 PM GMT (Updated: 11 Oct 2019 9:06 PM GMT)

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்யும் நாடுகளுக்கு இந்தியா தனது கண்டனத்தை ஐ.நா.வில் பதிவு செய்தது.

நியூயார்க்,

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத், தனது அடிப்படை செலவுகளுக்கு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்துக்கொள்ள அனுமதிக்குமாறு ஐ.நா.விடம் பாகிஸ்தான் சமீபத்தில் கோரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில் பயங்கரவாதிகளுக்கு இதுபோல நிதியுதவி செய்யும் நாடுகளுக்கு ஐ.நா.வில் இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது. சர்வதேச பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஐ.நா. பொதுச்சபையின் 6-வது கமிட்டி கூட்டத்தில், இந்தியக்குழுவின் முதலாவது செயலாளரும், சட்ட ஆலோசகருமான யேட்லா உமாசங்கர் இது தொடர்பாக பேசும்போது கூறுகையில், ‘பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாத குழுக்கள் தங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளை தொடர்வதற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிதியுதவி செய்யும் நாடுகள் அல்லது அவற்றின் அமைப்புகளுக்கு இந்தியா கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது’ என்று தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக நிதி நடவடிக்கை பணிக்குழு சிறப்பாக செயல்படுவதாக கூறிய உமாசங்கர், இந்த அமைப்புக்கு ஐ.நா. முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கும் செயல்களில் ஈடுபடும் நாடுகள் அந்த நடவடிக்கைகளை நிறுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Next Story