வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம்: ஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்


வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம்: ஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்
x
தினத்தந்தி 11 Oct 2019 11:30 PM GMT (Updated: 11 Oct 2019 9:23 PM GMT)

ஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதால் வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்து உள்ளது.

டெஹ்ரான்,

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் காரணமாக வளைகுடா பிராந்தியத்தில் ஏற்கனவே பதற்றம் நீடித்து வந்த நிலையில், சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் வயல் மீது கடந்த மாதம் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால் சவுதி அரேபியாவில் 50 சதவீதத்துக்கும் அதிகமான கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பு ஏற்றபோதும் ஈரான்தான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா குற்றம் சாட்டின. ஆனால் ஈரான் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தது.

எனினும் ஈரானை அச்சுறுத்தும் விதமாக அமெரிக்கா, வளைகுடா பிராந்தியத்தில் ராணுவவீரர்களையும், போர் தளவாடங்களையும் குவித்தது. இதன் காரணமாக வளைகுடா பிராந்தியத்தில் மேலும் பதற்றம் அதிகரித்தது.

இந்த நிலையில் சவுதி அரேபியாவின் ஜெட்டா துறைமுகம் அருகே சென்று கொண்டிருந்த ஈரான் அரசு எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமான ‘சபிதி’ என்ற எண்ணெய் கப்பல் மீது நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

இது குறித்து ஈரான் அரசு எண்ணெய் நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

சவுதி அரேபியா துறைமுகத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த ‘சபிதி’ எண்ணெய் கப்பலில் அடுத்தடுத்து 2 முறை பயங்கர வெடிப்பு நேரிட்டது.

அநேகமாக இது ஏவுகணை தாக்குதலில் ஏற்பட்டிருக்கலாம். கப்பலில் உள்ள மாலுமிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதேபோல் கப்பலும் உறுதி தன்மையுடன் இருக்கிறது.

எனினும் ஏவுகணை தாக்குதல் காரணமாக கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனினும் தாக்குதல் நடத்தியது யார் என்பதை உறுதி செய்வதில் குழப்பம் நீடிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு வளைகுடா பிராந்தியத்தில் சவுதி அரேபியா உள்பட பிற வெளிநாட்டு சரக்கு கப்பல்கள் இதே போன்ற தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. ஆனால் ஈரான் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதல் முறை.

இந்த தாக்குதல் காரணமாக மீண்டும் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து உள்ளது. இதற்கிடையே ஈரான் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி வெளியானதும் கச்சா எண்ணெயின் விலை 2 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


Next Story