உலக செய்திகள்

துருக்கிக்கு அமெரிக்க ராணுவ மந்திரி எச்சரிக்கை - பொருளாதார தடை விதிக்க பரிசீலனை + "||" + US military minister warns Turkey - To impose economic sanctions Review

துருக்கிக்கு அமெரிக்க ராணுவ மந்திரி எச்சரிக்கை - பொருளாதார தடை விதிக்க பரிசீலனை

துருக்கிக்கு அமெரிக்க ராணுவ மந்திரி எச்சரிக்கை - பொருளாதார தடை விதிக்க பரிசீலனை
குர்து இன போராளிகள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு துருக்கிக்கு அமெரிக்க ராணுவ மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாஷிங்டன்,

குர்து இன போராளிகள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால், கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்று துருக்கிக்கு அமெரிக்க ராணுவ மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார். துருக்கி மீது பொருளாதார தடை விதிப்பது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.


துருக்கி எல்லையை ஒட்டி சிரியா நாட்டின் வடபகுதியில் குர்து இன போராளிகள் ஆதிக்கம் உள்ளது. அவர்களை குறிவைத்து கடந்த 9-ந் தேதி துருக்கி ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இதனால், அந்த பகுதியில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறி விட்டனர்.

பொதுமக்கள் பாதிக்கப்படுவதால், இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், சமரசம் செய்து வைக்கத்தயார் என்று அறிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் நேற்று டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இதே கோரிக்கையை விடுத்தார்.

இந்நிலையில், சிரியாவின் கொபானி நகர் அருகே முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள், துருக்கி ராணுவத்தின் பீரங்கி தாக்குதலுக்கு உள்ளாகின. ஆனால், அமெரிக்க படைத்தரப்பில் காயம் ஏதும் இல்லை. அமெரிக்க ராணுவ தலைமையகமான ‘பென்டகன்‘ இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியது.

இதனால், துருக்கி மீது அமெரிக்கா கடும் ஆத்திரம் அடைந்துள்ளது. தாக்குதலை நிறுத்துமாறு துருக்கிக்கு நிர்பந்தம் அளிக்கத் தொடங்கி உள்ளது. தாக்குதலை நிறுத்தாவிட்டால், கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்க ராணுவ மந்திரி மார்க் எஸ்பர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், துருக்கி மீது பொருளாதார தடை விதிப்பது பற்றியும் அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து அமெரிக்க நிதி மந்திரி ஸ்டீவன் மோசின் கூறியதாவது:-

துருக்கி மீது இப்போது பொருளாதார தடை எதுவும் அமலில் இல்லை. ஆனால், தாக்குதலால் பொதுமக்களும், அவர்களின் சொத்துகளும் பாதிக்கப்படுவது குறித்து ஜனாதிபதி டிரம்ப் கவலை அடைந்துள்ளார்.

பொருளாதார தடை உத்தரவில் விரைவில் கையெழுத்திட இருப்பதாக அவர் கூறியுள்ளார். துருக்கி அரசுடன் தொடர்புடைய எவர் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படலாம். இதுதொடர்பாக தயார்நிலையில் இருக்குமாறு நிதி அமைப்புகளை கேட்டுக்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதே சமயத்தில், குர்து இன போராளிகள் மீதான தாக்குதல் தொடரும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார். அவரை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்தார். சிரியாவின் ராஸ் அல்-அய்ன் நகரை கைப்பற்றி விட்டதாக துருக்கி ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது.