ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்குதல்: 4 பேர் பலி; 100 பேர் காயம்


ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்குதல்:  4 பேர் பலி; 100 பேர் காயம்
x

ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்குதலுக்கு 4 பேர் பலியாகி உள்ளனர். 100 பேர் படுகாயமடைந்தனர்.

டோக்கியோ,

ஜப்பானை ஹகிபிஸ் புயல் நேற்று கடுமையாக தாக்கியது. தலைநகர் டோக்கியோவுக்கு தென்மேற்கில் உள்ள இசு தீபகற்பத்தில், உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு புயல் கரையை கடந்தது. இதனால், பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.

கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய புயலாக இது கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்ததால், வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. டோக்கியோ, மிய், ஷிசுவோகா, குன்மா, சிபா உள்பட 7 பிராந்தியங்களில் வசிக்கும் சுமார் 42 லட்சம் பேர் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.

டோக்கியோவில் ஓட்டல்கள், கடைகள், மருந்தகங்கள் மூடப்பட்டு இருந்தன. முன்னெச்சரிக்கையாக, ஜப்பான் முழுவதும் சுமார் 2 ஆயிரம் சர்வதேச, உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்கு தேவையான மின் சேவை துண்டிக்கப்பட்டது.

இந்த புயல் மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பயணிக்கிறது.  புயல் தாக்குதலுக்கு 4 பேர் பலியாகி உள்ளனர்.  100 பேர் காயமடைந்து உள்ளனர்.  நாடு முழுவதும் 11 பேரை காணவில்லை என மீட்பு பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் வழங்கிய தகவலில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதனிடையே, கிழக்கு மற்றும் மத்திய ஜப்பான் பகுதியில் இருந்து வெளியேறும்படி மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு அரசால் வெளியிடப்பட்டது.  ஹொன்சு தீவில் இருந்து 60 லட்சம் பேர் வெளியேற அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

எனினும், டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையம் மற்றும் ஷிங்கான்சென் புல்லட் ரெயில் சேவைகள் இன்று காலையில் இருந்து மீண்டும் தொடங்கப்பட்டன.  ஹகிபிஸ் புயல் இன்று மதியம் வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story