சீனாவை துண்டாட நினைப்பவர்கள் நசுக்கப்படுவார்கள் -ஜி ஜின்பிங் எச்சரிக்கை


சீனாவை துண்டாட நினைப்பவர்கள் நசுக்கப்படுவார்கள் -ஜி ஜின்பிங் எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 Oct 2019 7:49 AM GMT (Updated: 14 Oct 2019 7:58 AM GMT)

சீனாவை துண்டாட நினைப்பவர்கள் நசுக்கப்படுவார்கள் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெய்ஜிங்,

சீனாவை துண்டாட நினைப்பவர்கள் நசுக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹாங்காங்கில் கடந்த 4 மாதங்களாக போராட்டங்கள் நீடித்து வரும் நிலையில், ஜி ஜின்பிங் இந்த பேச்சு சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது.

சீன  வெளியுறவுத் துறை அமைச்சகம் ஜி ஜின்பிங் கூறியதாக வெளியிட்டுள்ள தகவலில், “சீனாவைத் துண்டாட நினைக்கும் எந்த அந்நிய சக்தியும், சீன மக்களுக்கு எதிரானதுதான். சீனாவிலிருந்து எந்த பகுதியை யார் துண்டாட நினைத்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள். அவர்களின் உடல்கள் சுக்குநூறாக்கப்படும். எலும்புகள் மண்ணோடு மண்ணாக போகும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஜி ஜின்பிங் எந்த ஒரு பிராந்தியத்தையும் குறிப்பிட்டு செல்லாவிட்டாலும்,  ஹாங்காங்கில் தொடர்ச்சியாக நடந்து வரும்  போராட்டங்களை கருத்தில் கொண்டே இவ்வாறு பேசியிருப்பதாக தெரிகிறது.

ஹாங்காங்கில் போராட்டம் ஏன்?

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, அங்கு போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டங்கள் ஹாங்காங்கை  உலுக்கியதை தொடர்ந்து, கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் மசோதாவை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், கூடுதலான ஜனநாயக உரிமைகள் கோரியும் ஹாங்காங்கில் போராட்டங்கள் தொடர்கின்றன.

ஜனநாயக ஆர்வலர்கள் முன்னெடுத்த இந்த போராட்டங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என பல தரப்பினரும் கைகோர்த்ததால் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஜூன் மாதத்தில் இருந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக இதுவரை சுமார் 850 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வார இறுதி நாள்களில் திரளான மக்கள் வீதிகளில் அமைதிவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

Next Story