துருக்கி தாக்குதல்: அரசுடன், குர்துகள் ஒப்பந்தம் சிரியா ராணுவம் எல்லையில் குவிப்பு


துருக்கி தாக்குதல்:  அரசுடன், குர்துகள் ஒப்பந்தம்  சிரியா ராணுவம் எல்லையில் குவிப்பு
x
தினத்தந்தி 14 Oct 2019 8:23 AM GMT (Updated: 14 Oct 2019 8:23 AM GMT)

துருக்கியின் ராணுவத் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக சிரியா அரசுடன், குர்து போராளிகள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.

தனி நாடு கேட்கும் குர்து இன மக்கள், எல்லையில் இருப்பது தங்கள் நாட்டுக்கு ஆபத்து என துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் கருதுகிறார். குர்து இனப் போராளிகளை ஒழித்துக் கட்ட தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், சிரியாவில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிடும் வீரர்களை அமெரிக்கா திரும்ப அழைத்து கொண்டதை  பயன்படுத்திக் கொண்டு குர்துக்கள் மீது தாக்குதல் நடத்த எர்டோகன் உத்தரவிட்டார்.

இதை அடுத்து சிரியாவின் வடக்கே உள்ள குர்துக்கள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படையினர் மீது துருக்கி 5-வது நாளாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போதுவரை சுமார் 4 லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

ஐந்து நாட்களாக தாக்குதல் தொடரும் நிலையில், தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக சிரியா அரசுடன் குர்துக்கள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.

அதன்படி தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மன்பீஜ் மற்றும் கோபேன் ஆகிய நகரங்களை சிரியாவிடம் ஒப்படைக்க குர்துக்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இதற்கு பிரதிபலனாக எல்லைக்குப் படைகளை அனுப்பி, குர்துக்குள் மீது தாக்குதல் நடத்தும் துருக்கி ராணுவத்தை எதிர்கொள்ள சிரியா அரசு ஒப்புக் கொண்டுள்ளது. 

குர்து படைகள் மீதான துருக்கியின் ராணுவத் தாக்குதலுக்கு ஈரான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

Next Story