துருக்கிக்கு எதிரான இந்தியாவின் அறிக்கைக்கு சிரியா வரவேற்பு


துருக்கிக்கு எதிரான இந்தியாவின் அறிக்கைக்கு சிரியா வரவேற்பு
x
தினத்தந்தி 14 Oct 2019 2:16 PM GMT (Updated: 14 Oct 2019 2:16 PM GMT)

துருக்கியின் ராணுவத் தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் கருத்தை சிரியா அரசு வரவேற்பதாக சிரியாவின் தூதர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் குர்து இன போராளிகள் மீது துருக்கி ராணுவம் நடத்தி வரும் தாக்குதலால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், துருக்கி அரசாங்கம் தனது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தின. இந்நிலையில் துருக்கி ராணுவத்தின் தாக்குதலுக்கு எதிராக இந்திய அரசு அறிக்கை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், “வடகிழக்கு சிரியாவில் துருக்கி ராணுவம் ஒருதலைபட்சமான தாக்குதல் நடத்தி வருவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இந்த செயலால் சிரியாவில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி தீவிரவாதத்தை தூண்டும் அபாயம் ஏற்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கான சிரியா நாட்டின் தூதர் ரியாத் காமல் அப்பாஸ் இது குறித்து பேசுகையில், “இந்தியாவின் கருத்தை சிரிய அரசாங்கம் வரவேற்கிறது. சர்வதேச அளவில் இந்தியாவின் கருத்திற்கு நல்ல மதிப்பு உள்ளது. வருங்காலத்தில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட சிரியா தயாராக உள்ளது” என்றார்.

பாகிஸ்தான் துருக்கிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது குறித்து பேசிய அவர், “துருக்கி அரசு தீவிரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. துருக்கிக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்து நாடுகளும் தீவிரவாத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளாகும்” என்றார்.

மேலும் சிரியாவிலிருந்து வரும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருவதற்காக இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்து கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

Next Story