இங்கிலாந்து இளவரசர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்: பிரதமர் இம்ரான் கானை இன்று சந்தித்தார்


இங்கிலாந்து இளவரசர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்: பிரதமர் இம்ரான் கானை இன்று சந்தித்தார்
x
தினத்தந்தி 15 Oct 2019 2:18 PM GMT (Updated: 15 Oct 2019 2:18 PM GMT)

பாகிஸ்தானுக்கு தனது மனைவியுடன் ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து இளவரசர் வில்லியம் இன்று பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேசினார்.

இஸ்லாமாபாத்,

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது மனைவி கேதரின் மிடில்டனுடன் ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று மாலை இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் அவர்களை பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா முகமது குரேஷி மற்றும் அவரது மனைவி இருவரும் வரவேற்றனர். பின்னர் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தங்கிய அவர்கள் இன்று தங்கள் சுற்றுப்பயணத்தை தொடங்கினர்.

முன்னதாக இஸ்லாமாபாத் பெண்கள் மாடல் கல்லூரிக்கு சென்ற அவர்கள் அங்குள்ள மாணவிகளை சந்தித்து அவர்களுடன் உரையாடினர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு இருவரும் உற்சாகமாக பதிலளித்தனர். மேலும் மாணவிகளின் எதிர்கால திட்டங்கள் பற்றியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அவர்களது கருத்துக்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.

பின்னர் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேசிய அவர்கள், அவர் ஏற்பாடு செய்திருந்த மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஜனாதிபதி ஆரிஃப் அல்வியை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தனர். ஜனாதிபதி ஆரிஃப் அல்வி மற்றும் அவரது மனைவி சாமினா ஆரிஃப் இருவரும் அவர்களை வரவேற்று உபசரித்தனர்.

பாதுகாப்பு காரணங்கள் கருதி இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி இருவரும் மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணம் குறித்த முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் விவகாரத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் வேளையில் இந்த சுற்றுப்பயணத்தை இவர்கள் மேற்கொண்டுள்ளனர். 

இந்த பயணம் மிகவும் சிக்கலான அரசு சுற்றுப்பயணமாக கருதப்படுகிறது. இளவரசர் வில்லியமின் தாயாரான இளவரசி டயானா தனது வாழ்நாளில் மூன்று முறை பாகிஸ்தானுக்கு பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story