உலக செய்திகள்

குர்து மக்களை அழிக்க நினைக்கும் துருக்கி : சிரியாவில் உக்கிரம் அடையும் போர் + "||" + Turkey looking to exterminate Kurdish people: An escalating war in Syria

குர்து மக்களை அழிக்க நினைக்கும் துருக்கி : சிரியாவில் உக்கிரம் அடையும் போர்

குர்து மக்களை அழிக்க நினைக்கும் துருக்கி : சிரியாவில் உக்கிரம் அடையும் போர்
குர்திஸ்தான்! - இந்தப் பெயரில் தனிநாடு காண வேண்டும் என்பதுதான் குர்து மக்களின் நீண்ட கால கனவு. குர்து மக்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்கள் என்று பார்த்தால் துருக்கி, ஈராக், ஈரான், சிரியா, ஆர்மேனியா ஆகிய நாடுகளில் வாழ்கிறார்கள்.
தாங்கள் வசிக்கிற பகுதிகளையெல்லாம் ஒன்று சேர்த்து தங்கள் கனவுப்பிரதேசமான குர்திஸ்தான் மலர வேண்டும் என்று குர்து மக்கள் விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள்.

சிரியாவைப் பொறுத்தமட்டில், அதன் வட கிழக்கு பகுதியில் குர்து மக்கள் வசிக்கிறார்கள்.

இந்த சிரியாவில், உலகையே அச்சுறுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை வேரடி மண்ணாக வீழ்த்தி விட வேண்டும் என்பது அமெரிக்காவின் கனவாக இருந்தது. இந்த கனவை நனவாக்குவதில் அமெரிக்காவுக்கு வலது கரமாக செயல்பட்டது சிரியாவில் உள்ள குர்து மக்களின் ஆயுதப்படையான ஒய்.பி.ஜே. என்று அழைக்கப்படுகிற சிரியா குர்து படைதான். ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான அமெரிக்காவின் போரில் பங்கெடுத்து பெருத்த உயிர்ச்சேதங்களை சந்தித்தது இந்த படை.

ஆனால் குர்து இனத்தையே கருவறுக்க வேண்டும் என்பது துருக்கியின் கனவு. குர்துக்களை ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்பதில் துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் உடும்புப்பிடி பிடித்து வருகிறார்.

இந்த நிலையில் அமெரிக்க படைகளை அங்கிருந்து வாபஸ் பெற முடிவு எடுத்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்.

அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து, சிரியாவில் குர்து மக்கள் பிடியில் உள்ள பகுதிகளில் துருக்கியின் ராணுவம் நுழைந்தது. போரும் தொடங்கி விட்டது.

இது குர்து மக்களுக்கு பேரிடியாக அமைந்தது. அவர்களின் நிலை பரிதவிப்பாக இருக்கிறது. ஒரு லட்சம் குர்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிர்க்கதியாக நிற்பதாக ஐ.நா. சொல்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட குர்து மக்கள் பலியாகி உள்ளனர்.

உதவிக்கரம் நீட்ட வேண்டிய நேரத்தில், சிரியாவின் வட கிழக்கு பகுதியில் இருந்து படைகளை திரும்பப்பெற்ற டிரம்பின் செயல், குர்து மக்களை முதுகில் குத்தியதாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. அது மட்டுமல்ல, சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு துருக்கிக்கு அமெரிக்கா அனுமதி அளித்தது போலவே எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஆனால் மனிதத்தன்மையற்ற ஒன்றை துருக்கி செய்தால், எல்லை தாண்டி சிரியாவுக்குள் நுழைந்தால் அதன் பொருளாதாரம் அழிக்கப்படும் என்று சமாளித்தார் டிரம்ப்.

டிரம்பின் முடிவு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. டிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசு கட்சியின் தலைவர்களே இந்த முடிவை ஏற்கவில்லை. ஆனால் டிரம்ப் தனது ராணுவ மந்திரி மார்க் எஸ்பரைக்கொண்டு தனது செயலை நியாயப்படுத்துகிறார். “ இரண்டு எதிரி படைகள் ஒன்றுக்கொன்று தீவிரமாக மோதிக்கொள்கிறபோது, இதன் இடையே அமெரிக்க படைகள் சிக்கிக்கொள்கிற நிலை உருவானது. இது ஏற்றுக்கொள்ள முடியாத நிலை அல்லவா?” என்கிறார் மார்க் எஸ்பர்.

இதற்கிடையே சிரியாவில் துருக்கி தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு மனிதாபிமான ரீதியில் பலரும் கவலை தெரிவித்தாலும்கூட, தாக்குதலை நிறுத்தப்போவது இல்லை என்று துருக்கியின் அதிபர் எர்டோகன் திட்டவட்டமாக கூறி விட்டார்.

அதே நேரத்தில், சிரியாவில் கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை காப்பதற்கு எங்களால் இனி முக்கியத்துவம் தர முடியாது. எங்கள் மண்ணையும், மக்களையும் காப்பதுதான் எங்கள் முதல் பணி என குர்து படை அறிவித்து விட்டது.

துருக்கியின் தாக்குதல்களை சமாளிப்பதே இந்த படைக்கு பெரும் பாடாக இருக்கிறபோது, ஐ.எஸ் கைதிகளை காப்பதற்கு முக்கியத்துவம் எப்படி கொடுக்க முடியும்?

இந்த நிலையில்தான் சிரியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த 950 ஐ.எஸ். பயங்கரவாதிகள், சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு, தப்பித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அங்கிருந்து படைகளை வாபஸ் பெற்ற அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் போலாகி இருக்கிறது.

துருக்கியின் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு சிரியா அரசுடன் குர்துக்கள் அதிரடியாக சமரசம் செய்து கொண்டுள்ளனர். ரஷியாவின் உதவியையும் குர்துக்கள் நாடுகின்றனர். ஆனால் துருக்கி படைகளுக்கும், குர்து படையினருக்கும் இடையேயான போர் உக்கிரமாகத்தொடங்கி இருக்கிறது.

சிரிய எல்லை நோக்கி கூடுதலான துருக்கி படைகள் விரைந்து கொண்டிருக்கின்றன என்றொரு தகவல் வந்திருக்கிறது. வட கிழக்கு பகுதியை நோக்கி சிரியாவின் ராணுவமும் விரைந்துள்ளது.

என்ன நடக்குமோ என்ற தவிப்பில் குர்து மக்கள் மட்டுமல்ல, சிரியா மக்களும் கவலையுடன் காத்திருக்கின்றனர்.

இடம் பெயரும் குர்து மக்கள்

சி ரியாவில் துருக்கி படைகளின் தாக்குதல் உக்கிரமாகி வருகிற நிலையில் அப்பாவி குர்து மக்களின் வாழ்வு கேள்விக்குறியாகி இருக்கிறது. உயிர் பிழைத்தால் போதும் என்கிற எண்ணத்தில் அவர்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்து போகத்தொடங்கி விட்டனர்.அந்த நாட்டின் வடக்கு மாகாணங்களான ராக்கா, ஹசாகா மாகாணங்களில் இருந்து 2¾ லட்சம் குர்துமக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களில் 70 ஆயிரம் பேர் குழந்தைகள் ஆவர். வீடுகளை விட்டு இடம் பெயர்ந்த பலரும் வீதிகளிலும், பள்ளிக்கூடங்களிலும் படுத்து உறங்குகின்றனர்.

அவர்களுக்கெல்லாம் அடிப்படை மனித நேய உதவிகள் செய்வதற்கு கூட நாதியில்லை என்ற நிலையே நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. தாக்குதல் நடைபெற்று வருகிற இடங்களில் ஆஸ்பத்திரிகள் செயல்படவில்லை. இதனால் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.