குர்துக்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தப்போவதில்லை; துருக்கி அதிபர் திட்டவட்டம்


குர்துக்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தப்போவதில்லை; துருக்கி அதிபர் திட்டவட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2019 12:15 AM GMT (Updated: 16 Oct 2019 7:44 PM GMT)

அமெரிக்காவின் பொருளாதார தடை பற்றி கவலை இல்லை என்றும், குர்துக்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என்றும் துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அங்காரா, 

சிரியாவின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் குர்து இன போராளிகளை குறிவைத்து, துருக்கி ராணுவம் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது.

குர்து இன போராளிகளை அழித்து விட்டு அந்த பகுதியில் ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கும் நோக்கத்துடன் துருக்கி இந்த தாக்குதலை நடத்துகிறது.

முன்னதாக குர்து இன போராளிகளுக்கு பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்க படைகள் திடீரென சிரியாவில் இருந்து திரும்ப பெறப்பட்டன.

இதனால் துருக்கி படைகளை சமாளிக்க முடியாமல் குர்து இன போராளிகள் திணறுகின்றனர். இதனால் அவர்கள் சிரியா அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி சிரிய ராணுவத்தின் உதவியை நாடினர்.

அதன்படி துருக்கி படைகளை எதிர்த்து போரிட சிரியா ராணுவம் வடக்கு பகுதியை நோக்கி நகர்கிறது. இந்த சூழலில் சிரியாவில் ரஷிய படைகளும் குர்துக்களுக்கு ஆதரவாக களம் இறங்கப்போவதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையே சிரியா மீதான ராணுவ தாக்குதலை கண்டித்து துருக்கியின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. மேலும் சண்டையை உடனடியாக நிறுத்த வேண்டுமென துருக்கியை அமெரிக்கா வலியுறுத்தியது.

சண்டையை நிறுத்தவில்லையென்றால் துருக்கியின் பொருளாதாரம் முற்றிலுமாக அழிக்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால் அமெரிக்காவின் பொருளாதார தடை குறித்து கவலை இல்லை என்றும், குர்துக்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என்றும் துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தலைநகர் அங்காராவில் பத்திரிகையாளர்களிடம் பேசிய தாயீப் எர்டோகன், “அவர்கள் சண்டை நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நாங்கள் ஒருபோதும் சண்டை நிறுத்தத்தை அறிவிக்க மாட்டோம்” என்று கூறினார்.

மேலும் அவர், “சண்டையை நிறுத்துமாறு அவர்கள் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். பொருளாதார தடைகளை அறிவிக்கிறார்கள். எங்கள் குறிக்கோள் தெளிவாக உள்ளது. எந்தவொரு தடை பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை” என்றார்.

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சும், வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் துருக்கிக்கு விரைந்துள்ளனர்.

அவர்கள் இன்று (வியாழக்கிழமை) அதிபர் தாயீப் எர்டோகனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிகிறது. 

Next Story