5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறுவது சவாலானது; நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு


5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறுவது சவாலானது; நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு
x
தினத்தந்தி 17 Oct 2019 12:00 AM GMT (Updated: 16 Oct 2019 8:37 PM GMT)

5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறுவது சவாலானது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

நியூயார்க்,

இந்தியாவை 2024-ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் (அதாவது நமது நாணய மதிப்பில் ரூ.350 லட்சம் கோடி) பொருளாதார நாடாக மாற்றிக்காட்ட வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு.

ஆனால் நாடு இப்போது பொருளாதார மந்த நிலையை சந்தித்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் 5 சதவீதம் என்ற அளவுக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவு கண்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச பொது விவகாரங்கள் கல்லூரியில் ‘இந்திய பொருளாதாரம்: சவால்களும், வாய்ப்புகளும்’ என்ற தலைப்பில் நேற்று முன்தினம் உரை ஆற்றினார்.

அப்போது அவர் கூறும்போது, “2014-ம் ஆண்டு பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது இந்தியா 1.7 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இருந்தது. 2019-ல் இந்தியா 2.7 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாகி இருக்கிறது. 5 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் சேர்க்கப்பட்டுள்ளது. 2024-25-ல் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியாவை ஆக்கி காட்டுவது என்பது சவாலானது. ஆனால் அது அடையத்தக்கதுதான்” என்று குறிப்பிட்டார்.

“5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடு இந்தியா என்ற நிலை வருகிறபோது, இன்றைய டாலர் மதிப்பை வைத்து பார்த்தால், உலக அளவில் 3-வது பெரிய பொருளாதார நாடாக உயரும் (தற்போது 7-வது நிலையில் உள்ளது.)” என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்த நிலையை அடைவதற்கு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த 5 ஆண்டுகளில் காணப்பட்ட 7½ சதவீதம் என்ற வளர்ச்சி வீதத்தைக் காட்டிலும் வேகமாக வளர வேண்டும் என்றும் அவர் கோடிட்டுக்காட்டினார்.

உலகில் வேகமாக வளர்ந்து வருகிற பொருளாதார நாடுகளில் ஒன்றாக நாங்கள் இருக்கிறோம் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜன், பிரவுன் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையின்போது, “நரேந்திர மோடியின் முதல் அரசு (2014-2019) பொருளாதாரத்தில் சிறப்பாக செயல்படவில்லை, ஏனென்றால், பொருளாதார வளர்ச்சியை எப்படி அடைவது என்பது பற்றிய தெளிவான பார்வை தலைமைக்கு இருந்ததாக தெரியவில்லை” என்று கூறியது பற்றி நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “ரகுராம் ராஜன் ஒரு பெரிய அறிஞர் என்ற வகையில் அவரை மதிக்கிறேன். இந்திய பொருளாதார வளர்ச்சி மிதமாக இருந்தபோது அவர் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தார். அவர் கவர்னராக இருந்தபோதுதான், தலைவர்களிடம் இருந்து (தங்களுக்கு வேண்டியவர்களுக்காக) வந்த தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் கடன்கள் வழங்கப்பட்டன. இப்போது அந்த வங்கிகள் எல்லாம் நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் அளிக்கிற நிதியை சார்ந்து இருக்கின்றன” என்று குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, “மன்மோகன் சிங்கும், ரகுராம் ராஜனும், பிரதமராகவும், ரிசர்வ் வங்கி கவர்னராகவும் இருந்த காலகட்டத்தை விட இப்போது பொதுத்துறை வங்கிகள் ஒன்றும் மோசமான நிலையில் இல்லை” என்றும் அவர் கூறினார்.

Next Story