விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க சந்திரயான்-2 தரையிறங்கு தளத்தின் புதிய படங்களை நாசா எடுத்தது


விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க சந்திரயான்-2 தரையிறங்கு தளத்தின் புதிய படங்களை நாசா எடுத்தது
x
தினத்தந்தி 17 Oct 2019 9:00 AM GMT (Updated: 17 Oct 2019 9:49 AM GMT)

விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்த இடத்தை கண்டறிய தரையிறங்க நிர்ணயிக்கப்பட்ட பகுதியின் புதிய புகைப்படங்களை நாசா படம் பிடித்து உள்ளது.

வாஷிங்டன்,

இதுவரை ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாத நிலவின் தென் துருவப்பகுதிக்கு செல்வதற்காக சந்திரயான்-2 என்ற விண்கல திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘இஸ்ரோ’ தீட்டி செயல்படுத்தியது.

கடந்த மாதம் 7-ந் தேதி திட்டமிட்டபடி சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவின் தென்துருவப்பகுதியில் மெல்ல மெல்ல தரை இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தரை இறங்க வேண்டிய இடத்தில் இருந்து 2.1 கி.மீ. தொலைவில் இருந்தபோது, விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

 விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியை  இஸ்ரோ விஞ்ஞானிகள்  தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பும் நாசாவும் தொடர்ந்து விக்ரம் லேண்டர் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. ஆனால் இதுவரை எந்த தகவலும் இல்லை.

செப்டம்பர்-27 சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் தரையிறங்க இலக்கு  நிர்ணயிக்கபட்ட தளத்தின் படங்களை நாசா வெளியிட்டது. செப்டம்பர் 17 அன்று இந்த படங்களை நாசாவின் சந்திர மறுமதிப்பீட்டு ஆர்பிட்டர் எடுத்து இருந்தது.

மாலை வேளையில் படங்கள் எடுக்கப்பட்டதால் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நாசா தெரிவித்து இருந்தது. தரையிறங்கும் பகுதி  படமாக்கப்பட்டபோது மாலை நேரமாக இருந்தது, இதனால் பெரிய நிழல்கள் நிலப்பரப்பின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. விக்ரம் லேண்டர் ஒரு நிழலில் மறைந்திருக்க வாய்ப்புள்ளது என நாசா தெரிவித்து இருந்தது. 

மேலும்  அக்டோபர் மாதம் விக்ரம் லேண்டர் தரை இறங்கும்  தளத்தை கடந்து செல்லும்போது, லேண்டரைக் கண்டுபிடித்து படம்பிடிக்க முயற்சிக்கும் அப்போது வெளிச்சம் சாதகமாக இருக்கும் என்று நாசா தெரிவித்து இருந்தது.

அதன்படி தற்போது சந்திரயான்-2 விக்ரம் லேண்டரை சந்திர மறுமதிப்பீட்டு  ஆர்பிட்டரை (எல்.ஆர்.ஓ) பயன்படுத்தி படம் பிடிக்க மற்றொரு முயற்சியை நாசா மேற்கொண்டது.

செப்டம்பர் 17 அன்று  கடைசியாக படங்களை  ஒப்பிடும்போது இந்தமாதம் 14 ந்தேதி திங்களன்று எடுத்த படங்கள் நல்ல வெளிச்ச நிலையில்  எடுக்கப்பட்டுள்ளன.

விஞ்ஞானிகள் தற்போது எடுத்த படங்களை ஆய்வு செய்து விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

விக்ரம் லேண்டர் விழுந்த இடம் கண்டறியபட்டால்  விஞ்ஞானிகளுக்கு இது ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும், இது இஸ்ரோவுடனான தொடர்பை இழந்தபோது லேண்டருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை அறியவும் உதவும்.

Next Story