சிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை


சிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை
x
தினத்தந்தி 17 Oct 2019 11:15 PM GMT (Updated: 17 Oct 2019 9:42 PM GMT)

நியூசிலாந்தை சேர்ந்த இளம்பெண் கேட்டி கிறிஸ்டினா ராகிச் (வயது 27). இவரது இளைய சகோதரி சிங்கப்பூரில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரை பார்ப்பதற்காக கேட்டி கிறிஸ்டினா ராகிச் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூர் சென்றார்.

சிங்கப்பூரில், 

கேட்டி கிறிஸ்டினா ராகிச், அவரது சகோதரி, சகோதரியின் நண்பர் ஆகிய 3 பேரும் மதுபான விடுதிக்கு சென்று மதுகுடித்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் கேட்டி கிறிஸ்டினா ராகிச்சின் சகோதரி தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர். அப்போது, மதுபோதை தலைக்கேறியதால் கேட்டி கிறிஸ்டினா ராகிச் அதிக சத்தம் எழுப்பி ரகளையில் ஈடுபட்டார். இது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.

அதன் பேரில் 2 பெண் போலீஸ் அதிகாரிகள் வந்து, கேட்டி கிறிஸ்டினா ராகிச்சை கைது செய்து, போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர். போலீஸ் நிலையம் வந்ததும் பெண் போலீஸ் அதிகாரி, கேட்டி கிறிஸ்டினா ராகிச்சை வாகனத்தில் இருந்து இறக்கினார். அப்போது அவர் போலீஸ் அதிகாரியின் கையை பலமாக கடித்தார். தடுக்க வந்த மற்றொரு பெண் போலீஸ் அதிகாரியின் முகத்தில் குத்தினார்.

இதையடுத்து போலீஸ் நிலையத்தில் இருந்த சக போலீசார் கேட்டி கிறிஸ்டினா ராகிச்சை மடக்கி பிடித்து சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் கேட்டி கிறிஸ்டினா ராகிச்சுக்கு 6½ மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Next Story