‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள முழு விபரங்களை இங்கிலாந்து பிரதமர் வெளியிட்டார்


‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள முழு விபரங்களை இங்கிலாந்து பிரதமர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 22 Oct 2019 7:32 AM GMT (Updated: 22 Oct 2019 7:32 AM GMT)

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள முழு விவரங்களை இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ளது.

லண்டன்,

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. இந்த பிரச்சினையால் டேவிட் கேமரூன், தெரசா மே ஆகியோர் பிரதமர் பதவியை இழந்தனர்.

அவர்களை தொடர்ந்து இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்று இருக்கும் போரிஸ் ஜான்சனும் ‘பிரெக்ஸிட்’டை நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகிறார். ஐரோப்பிய கூட்டமைப்புடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின்படி வருகிற 31-ந்தேதிக்குள் ‘பிரெக்ஸிட்’ நிறைவேறும் என அவர் உறுதிபட கூறியிருந்தார்.

இந்த நிலையில் ‘பிரெக்ஸிட்’ தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, போரிஸ் ஜான்சன் தாக்கல் செய்த திருத்தப்பட்ட ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை எம்.பி.க்கள் வழக்கம் போல் நிராகரித்தனர்.

அத்துடன் ‘பிரெக்ஸிட்டு’ க்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு ஜனவரி வரை நீட்டிக்க கோரும் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 322 பேர் சட்டத்துக்கு ஆதரவாகவும், 306 பேர் சட்டத்துக்கு எதிராகவும் வாக்களித்தனர்.

இதனால் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களிடம் ‘பிரெக்ஸிட்டு’க்கான காலக்கெடுவை நீட்டிக்க வலியுறுத்தும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.

அதன்படி சட்டப்படியான கடமையை நிறைவேற்றும் வகையில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கவேண்டும் என்று கோரி ஐரோப்பிய கூட்டமைப்புக்கு போரிஸ் ஜான்சன் கடிதம் அனுப்பினார். ஆனால், அந்தக் கடிதத்தில் அவர் கையெழுத்து போடவில்லை.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து  வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முழு விபரங்களை  இங்கிலாந்து  அரசு வெளியிட்டுள்ளது.

போரிஸ் ஜான்சன் தனது 110 பக்க ‘பிரெக்ஸிட்’ திரும்பப் பெறுதல் மசோதாவை (124 பக்க விளக்கக் குறிப்புகளுடன்) எம்.பி.க்கள் விவாதிக்கத் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

திங்களன்று வெளியிடப்பட்ட பிரதமரின் திரும்பப் பெறுதல் ஒப்பந்த மசோதாவை ஆதரிக்கலாமா? என்பது குறித்து எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். மூன்று நாட்களில்  மசோதாவை விரைவாக விவாதிக்க போரிஸ் ஜான்சன் விரும்புகிறார்.

அக்டோபர் 31ஆம் தேதிக்குள் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து  வெளியேறுமா? என்ற கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.

Next Story