இங்கிலாந்தில் பரபரப்பு: கன்டெய்னர் லாரியில் 39 உடல்கள் கண்டெடுப்பு


இங்கிலாந்தில் பரபரப்பு: கன்டெய்னர் லாரியில் 39 உடல்கள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 23 Oct 2019 10:09 AM GMT (Updated: 23 Oct 2019 10:15 PM GMT)

இங்கிலாந்தில் கன்டெய்னர் லாரியில் 39 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லண்டன்,

உள்நாட்டு போர், அரசியல் நெருக்கடி, பொருளாதார மந்த நிலை போன்ற பிரச்சினைகளால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, வெனிசூலா, சோமாலியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து மக்கள் வாழ்வாதாரம் தேடி பிறநாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

இப்படி அகதிகளாக செல்பவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகளில்தான் தஞ்சம் அடைகின்றனர். கட்டுக்கடங்காத அகதிகளின் வருகையால் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன.

இதனால் அகதிகள் நுழைவதை தடுக்கும்வண்ணம் அந்த நாடுகள் எல்லைப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றன.

ஆனால் அதை மீறியும் அகதிகள் சட்டத்துக்கு புறம்பான வகையில் எல்லை பாதுகாப்புபடையினரின் கண்களில் படாமல் தஞ்சம் அடைய வேண்டி நாட்டுக்குள் புகுந்து விடுகின்றனர்.

அந்த வகையில் கன்டெய்னர்கள் மற்றும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்குள் அகதிகள் மறைத்து வைக்கப்பட்டு ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு கடத்தப்படுகிறார்கள்.

பல மணி நேரம் அல்லது நாள் கணக்கில் ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்படும்போது மூச்சு திணறல் ஏற்பட்டு அகதிகள் இறந்துவிடுகின்றனர்.

கடந்த 2000-ம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தின் டோவர் நகருக்கு வந்த லாரியில் இருந்த கன்டெய்னரில் 58 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். இந்த சம்பவம் இங்கிலாந்து மட்டும் இன்றி உலகையே உலுக்கியது.

விசாரணையில் அவர்கள் சீனாவில் இருந்து இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக கடத்திவரப்பட்டபோது உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக டென்மார்க்கை சேர்ந்த லாரி டிரைவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள எசெக்ஸ் நகரில் இருக்கும் தொழிற்பூங்காவுக்கு நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 1.40 மணிக்கு பல்கேரியா நாட்டில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று வந்தது.

அந்த கன்டெய்னரை தொழிற்பூங்கா காவலாளிகள் சோதனை செய்தனர். அப்போது கன்டெய்னருக்குள் பலர் பிணமாக கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ந்து போனார்கள். ஒரு சிறுவன் உள்பட 39 பேர் கன்டெய்னருக்குள் இறந்து கிடந்தனர்.

இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் 39 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வடக்கு அயர்லாந்தை சேர்ந்த 25 வயதான லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கன்டெய்னருக்குள் பிணமாக கிடந்தவர்கள் யார்? அவர்கள் எப்படி இறந்தார்கள்? போன்ற விவரங்கள் தெரியவில்லை.

எனினும் அவர்கள் இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக குடியேற முயன்ற அகதிகளாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

கன்டெய்னரில் 39 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தன்னை அதிர்ச்சியடைய செய்ததாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “இந்த சம்பவத்தின் பின்னணியை அறிய எசெக்ஸ் நகர போலீசாருடன் இணைந்து உள்துறை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

இங்கிலாந்து உள்துறை மந்திரி பிரித்தீ பட்டேல் இது பற்றி கூறுகையில், “இந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஒருசேர தந்திருக்கிறது. ஆள்கள் கடத்தல் ஒரு மோசமான மற்றும் ஆபத்தான வணிகமாகும். இதற்கு காரணமானவர்கள் நிச்சயமாக நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” என கூறினார்.


Next Story