கண்டெய்னர் லாரியில் 39 உடல்கள் கண்டெடுப்பு: நினைத்து பார்க்க முடியாதது -பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிர்ச்சி


கண்டெய்னர் லாரியில் 39 உடல்கள் கண்டெடுப்பு: நினைத்து பார்க்க முடியாதது -பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிர்ச்சி
x
தினத்தந்தி 24 Oct 2019 12:32 PM GMT (Updated: 24 Oct 2019 12:58 PM GMT)

கண்டெய்னர் லாரியில் 39 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது நினைத்து பார்க்க முடியாதது என்றும் அதிர்ந்து போய் உள்ளதாகவும் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறி உள்ளார்.

லண்டன்

இங்கிலாந்தில், போலீஸ் பறிமுதல் செய்த லாரி கண்டெய்னரில் சடலமாக கிடந்தவர்கள் சீனர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதார மந்தநிலை, அரசியல் நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளால் வாழ்வாதாரத்தை இழக்கும் பின்தங்கிய நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர்.

அவ்வாறு குடிபெயர்வோரை தடுக்க எல்லையோரம் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளதால், மக்கள் சட்டவிரோதமாக குடியேற முயல்கின்றனர்.

அவ்வாறு சட்டவிரோதமாக செல்வோர் பூட்டிய வாகனங்களில் நீண்ட தூரம் பயணித்து மூச்சுத் திணறி உயிரிழப்பது உண்டு. அந்தவகையில் கடந்த 2000-ம் ஆண்டு டென்மார்க்கிலிருந்து இங்கிலாந்து வந்த லாரியில் 58 சீன அகதிகளின்  உடல்கள் இருந்த சம்பவம் உலகையே அதிரவைத்தது.

இந்தநிலையில், பெல்ஜியத்திலிருந்து கப்பல் மூலம் லண்டன் வந்த கண்டெய்னர் நேற்று லாரியில் வைத்து லண்டனின் கிரேய்ஸ் பகுதியில் உள்ள தொழில்நுட்ப பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது.

அதனை காவலாளிகள் சோதனை செய்தபோது, அதில் பெண்கள் உள்பட  39  பேரின் உடல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து லாரியை ஓட்டி வந்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் கண்டெய்னருடன் சடலத்தை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், சடலமாக கிடந்தவர்கள் சீனர்கள் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்த சம்பவம் நினைத்து பார்க்க முடியாதது என்றும் இந்த சோகமான சம்பவத்தைக் கேட்டு அதிர்ந்து போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் உண்மை என்ன என்பதை போலீசார் விரைவில் கண்டுபிடிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

Next Story