காஷ்மீரில் இயல்பு நிலையை கொண்டு வர என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்- அமெரிக்கா


காஷ்மீரில் இயல்பு நிலையை கொண்டு வர என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்- அமெரிக்கா
x
தினத்தந்தி 25 Oct 2019 4:40 AM GMT (Updated: 25 Oct 2019 4:40 AM GMT)

காஷ்மீரில் இயல்பு நிலையை கொண்டு வர என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என்று அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது.

வாஷிங்டன்,

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து காஷ்மீரில் மக்கள் நடமாட்டத்துக்கும், தகவல் தொடர்பு சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  காஷ்மீரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகின்றன. 

இந்த சூழலில்,  காஷ்மீரில் அரசியல் மற்றும் பொருளாதார இயல்பு நிலையை திரும்ப கொண்டு வருவதற்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என்று அமெரிக்கா கோரியுள்ளது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பொறுப்பு துணை செயலர் அலைஸ் ஜி வெல்ஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:- “ தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்து, அன்றாட வாழ்க்கையில் முழு இயல்பு நிலையை கொண்டு வரவும், அரசியல் மற்றும் பொருளாதார இயல்பு நிலையை கொண்டு வருவதற்கு என்ன செயல் திட்டம் வைத்துள்ளீர்கள் என்று நாங்கள் தொடர்ந்து இந்தியாவிடம் வலியுறுத்துவோம். காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கும் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது எங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது.  எனினும், காஷ்மீரில் மொபைல் போஸ்ட் பெய்டு சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது போன்ற சில முன்னேற்றங்களை நாங்கள் பார்த்து வருகிறோம். 

லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது, ஹிஸ்புல் முஜாகிதின் போன்ற பயங்கரவாத இயக்கங்கள் அங்கு (காஷ்மீர்) மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளன.  எல்லை தாண்டி காஷ்மீரில் வன்முறையை ஏற்படுத்த முயல்பவர்கள் பாகிஸ்தான், காஷ்மீர் மக்களுக்கு எதிரிகளே என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதை நாங்கள் வரவேற்கிறோம். தங்கள் நாட்டில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுப்பதன் அடிப்படையில்,  இந்தியா-பாகிஸ்தான் இடையே ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறுவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.” இவ்வாறு அவர் கூறினார். 

Next Story