ஜெர்மனியில் துக்க நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட போதை ‘கேக்’


ஜெர்மனியில் துக்க நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட போதை ‘கேக்’
x
தினத்தந்தி 30 Oct 2019 11:02 PM GMT (Updated: 30 Oct 2019 11:02 PM GMT)

ஜெர்மனியில் துக்க நிகழ்ச்சி ஒன்றில் போதை ‘கேக்’ பரிமாறப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பெர்லின்,

ஜெர்மனி நாட்டில் துக்க நிகழ்வுகளின்போது, இறந்தவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பின்னர் அதில் பங்கேற்க வந்தவர்களுக்கு ஓட்டலில் ‘கேக்’கும், காபியும் பரிமாறுகிற கலாசாரம் உள்ளது.

அந்த வழக்கப்படி ஒரு துக்க நிகழ்வில் பங்கேற்க வந்தவர்களுக்கு வீதாகென் என்ற இடத்தில் உள்ள ஓட்டலில் ‘கேக்’, காபி பரிமாறப்பட்டது.

ஆனால் அவற்றை சாப்பிட்ட 13 பேருக்கு குமட்டலும், தலை சுற்றலும் ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடியாக உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது பற்றிய புகார், போலீசுக்கு சென்றது. போலீசார் நடத்திய விசாரணையில், மற்றொரு நிகழ்ச்சிக்காக தயாரான போதையூட்டும் ‘கேக்’ தவறுதலாக துக்க நிகழ்வில் பங்கேற்க வந்தவர்களுக்கு பரிமாறப்பட்டு விட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக ஓட்டல் அதிபரின் மகளிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இது அந்த நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story