தாய்லாந்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 15 பேர் பலி


தாய்லாந்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 15 பேர் பலி
x
தினத்தந்தி 6 Nov 2019 7:58 AM GMT (Updated: 6 Nov 2019 10:07 PM GMT)

தாய்லாந்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பாங்காக்,

தாய்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள யாலா, பட்டாணி, நாராதிவத் ஆகிய மாகாணங்களில் குறிப்பிட்ட ஒரு மதத்தை சேர்ந்த மக்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தெற்கு பிராந்தியத்தை தனிநாடாக அறிவிக்கக்கோரி கடந்த 2004-ம் ஆண்டு முதல் போராடி வருகின்றனர்.

அந்த வகையில் தெற்கு மாகாணங்களை சேர்ந்த கிளர்ச்சி அமைப்புகள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றன. இதன் காரணமாக அந்த மாகாணங் களில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டு அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக இருதரப்புக்கும் இடையே நடந்து வரும் மோதலில் இதுவரை சுமார் 7 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் யாலா மாகாணத்தில் முவாங் மாவட்டத்தில் உள்ள 2 போலீஸ் சோதனை சாவடிகள் மீது நேற்று முன்தினம் மாலை ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் போலீசார், உள்ளூர் அப்பாவி மக்கள் உள்பட 15 பேர் பலியாகினர். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. எனினும் பல ஆண்டுகளாக தனிநாடு கோரி அரசுக்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சியாளர்களே இந்த தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

Next Story