யுரேனியம் செறிவூட்டல் பணியை தொடங்கியது ஈரான்; பிரான்ஸ் கண்டனம்


யுரேனியம் செறிவூட்டல் பணியை தொடங்கியது ஈரான்; பிரான்ஸ் கண்டனம்
x
தினத்தந்தி 8 Nov 2019 12:00 AM GMT (Updated: 7 Nov 2019 8:07 PM GMT)

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி யுரேனியம் செறிவூட்டும் பணிகளை ஈரான் தொடங்கியது. இதற்கு பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெஹ்ரான்,

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே வரலாற்று சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தம் கடந்த 2015-ம் ஆண்டில் கையெழுத்தானது. தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை வல்லரசு நாடுகள் விலக்கி கொள்ளவும் இரு தரப்பிலும் அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், அணுசக்தி எரிபொருளாக பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை குறிப்பிட்ட அளவே ஈரான் கையிருப்பு வைத்திருக்க வேண்டும், அணுசக்தி மையங்களில் யுரேனியம் எரிபொருளை 3.67 சதவீதத்துக்கு மேல் செறிவூட்டக் கூடாது, முதல் தலைமுறையை சேர்ந்த ஐ.ஆர்.1 ரக சாதனங்களை கொண்டே யுரேனியம் சுத்திகரிக்கப்பட வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

இதற்கிடையே, அமெரிக்காவில் ஒபாமா பதவி காலத்தில் கையெழுத்தான இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்து வந்த ஜனாதிபதி டிரம்ப், இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தார். அதுமட்டும் இன்றி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதும் ஈரான் மீது மீண்டும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தார்.

மேலும் அணு ஆயுத விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி புதியதொரு ஒப்பந்தத்தை உருவாக்க வேண் டும் என டிரம்ப், ஈரானை வலியுறுத்தி வருகிறார். ஆனால் தங்கள் மீதான பொருளாதார தடைகளை நீக்கும்வரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்பதில் ஈரான் திட்டவட்டமாக உள்ளது.

அத்துடன் அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு பதிலடியாக செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பின் அளவு உள்பட அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள 3 முக்கிய நிபந்தனைகளை மீறுவதாக ஈரான் அறிவித்தது. இதனை அமெரிக்கா கண்டித்து ஈரான் மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதித்தது.

இந்த நிலையில், 4-வது விதிமீறலாக, போர்டோ நகரிலுள்ள தனது நிலத்தடி அணுசக்தி மையத்தில் யுரேனியம் செறிவூட்டும் பணிகளை தொடங்கப் போவதாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானி கடந்த செவ்வாய்க்கிழமை அதிரடியாக அறிவித்தார்.

போர்டோ நகர நிலத்தடி அணுசக்தி மையத்தில், யுரேனியம் செறிவூட்டும் பணிகள் மேற்கொள்ளப்படக் கூடாது என்று 2015-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் இந்த நடவடிக்கை உலக அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும், இதன் மூலம் அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஈரான் மேலும் தனிமைப்படுத்தப்படும் என்றும் அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை விடுத்தது.

ஆனால் அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி ஈரான் ஏற்கனவே அறிவித்தபடி போர்டோ நகர நிலத்தடி அணுசக்தி மையத்தில் யுரேனியம் செறிவூட்டும் பணிகளை நேற்று தொடங்கியது. சர்வதேச அணுசக்தி அமைப்பின் (ஐ.ஏ.இ.ஏ) ஆய்வாளர்கள் முன்னிலையில் யுரேனியம் செறிவூட்டும் பணிகள் தொடங்கியதாக ஈரான் அனுசக்தி அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரான்ஸ், ஈரானின் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளது. இது அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேற விரும்புவதை வெளிப்படையாக காட்டுவதாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார். 

Next Story