அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் மைக்கேல் புளூம்பெர்க் குதித்தார்


அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் மைக்கேல் புளூம்பெர்க் குதித்தார்
x
தினத்தந்தி 9 Nov 2019 11:23 PM GMT (Updated: 9 Nov 2019 11:23 PM GMT)

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் மைக்கேல் புளூம்பெர்க் போட்டியாளராக பதிவு செய்து கொண்டார்.

வாஷிங்டன், 

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் களம் இறங்க உள்ளார்.

அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென், இந்திய வம்சாவளி பெண் எம்.பி.க்கள் கமலா ஹாரிஸ், துளசி கப்போர்டு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பாளர் போட்டியில் நுழைந்து உள்ளனர்.

இந்த வரிசையில் இப்போது சேர்ந்து இருப்பவர், பெரும் கோடீசுவரரான மைக்கேல் புளூம்பெர்க் (வயது 77). அலபாமா மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் போட்டியாளராக நேற்று முன்தினம் அவர் பதிவு செய்து கொண்டார்.

ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தல், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி நடக்கிறது.

அலபாமா, ஆர்கனாஸ், கலிபோர்னியா, கொலராடோ, மெய்னே, மசாசூசெட்ஸ், மின்னசோட்டா, வடக்கு கரோலினா, ஒக்லஹாமா, டென்னிசிசி, டெக்சாஸ், யுட்டா, வெர்மாண்ட், வர்ஜீனியா ஆகிய 14 மாகாணங்களில் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான தேர்தல் நடைபெறும்.

Next Story